டெல்லி

முன்னாள் பிரதமர் தேவே கவுடா பேரன் விவகாரத்தில் மோடி மவுனமாக உள்ளது ஏன் என பிரியங்கா காந்தி வினா எழுப்பியுள்ளார்.

முன்னாள் பிரதமரும் கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் நிறுவனருமான தேவகவுடாவின் பேரன் பிரஜ்வால் ரேவண்ணா ஹாசன் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். கர்நாடகாவில் முதல் கட்டமாக நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அவர் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டார். தற்போது மதச்சார்பற்ற ஜனதா தளம் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.

சமீபத்தில் பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்க மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்குக் கடிதம் எழுதி இருந்தது. இந்தப் புகார் குறித்துச் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. கர்நாடக முதல்வர் சித்தராமையா இதற்கான உத்தரவை வெளியிட்டிருந்தார் .

காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தனது எக்ஸ் தளத்தில்,

”10 நாட்களுக்கு முன்பு பிரதமர் கைகளைக் குலுக்கியும், தோள்களில் கைபோட்டும் கர்நாடகப் பிரசாரக் கூட்டத்தில் புகழ்ந்துபேசிய நபர் இன்று நாட்டை விட்டே தப்பியோடித் தலைமறைவாக இருக்கிறார். மோடி ஆதரித்த வேட்பாளர் நூற்றுக்கணக்கான பெண்களின் வாழ்க்கையைச் சீரழித்த குற்றங்களைக் கேட்கும்போதே நெஞ்சம் நடுங்குகிறது. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனம் சாதிப்பது ஏன்?” 

என்று பதிவிட்டுள்ளார்.