புனே

நாடெங்கும் ராகுல் காந்திக்கு மாபெரும் வரவேற்பு உள்ளதாக சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.

மகாராஷ்டிராவில் 5 கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் முதல் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 19-ந் தேதி 5 தொகுதிகளிலும் நேற்று முன் தினம் 2 ஆம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு 8 தொகுதிகளில் நடந்து முடிந்தது.

மே மாதம் 7 ஆம் தேதி அன்று 3 ஆம் கட்ட தேர்தல் ராய்காட், பாராமல், உஸ்மனாபாத், லாத்தூர்(தனி), சோலாப்பூர்(தனி), மாதா, சாங்கிலி, சத்தாரா, ரத்னகிரி-சிந்துதுர்க், கோலாப்பூர் மற்றும் ஹட்கனங்கலே ஆகிய 11 தொகுதிகளில் நடைபெற உள்ளது. இங்க் தேர்தல் பிரசாரம் மும்முரமாக நடைபெற்று வேட்பாளர்கள் தீவிரப் பிரசாரம் செய்து வருகிறார்கள்.

இன்று புனேவில் மகாராஷ்டிர நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத் செய்தியாளர்களிடம்,

”பாராமதி மக்களவைத் தொகுதியின் போட்டி மகாராஷ்டிராவின் பெருமைக்கான போராட்டம். மாநிலத்தில் மொத்தமுள்ள 48 தொகுதிகளில் 30-35 இடங்களில் எங்கள் கூட்டணி வெல்லும். சுப்ரியா சுலேவின் பின்னால் மராட்டிய மக்கள் அனைவரும் உள்ளனர், அவர் வெற்றி பெறுவதை உறுதி செய்வார்கள்.

அஜித் பவார் தன்னை காப்பாற்றிக்கொள்ள ஆளும் பாஜக-சிவசேனை கூட்டணிக்கு மாறியுள்ளார். வெற்றி பெறுவதில் நம்பிக்கை இருந்தால் அஜித் பவார் ஏன் பாராமதியில் மக்களை அச்சுறுத்துகிறார். நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. தேர்தலில் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெறும். ஜூன் 4 ஆம் தேதிக்குப் பிறகு ஆட்சி மாற்றத்தை மக்கள் காண்பார்கள்.”

என்று கூறினார்.