டெல்லி: மக்களவைக்கான 2வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு வரும் 26ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ள நிலையில், தேர்தல் நடைபெறும் மாநிலங்கள் மற்றும் தொகுதிகளில் இன்று மாலை 6மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைகிறது. இதில், ராகுல்காந்தி உள்பட முக்கிய தலைவர்கள்  போட்டியிடும் தொகுதிகள் உள்பட 13 மாநிலங்களில் உள்ள 89 தொகுதிகளில், இன்று மாலையுடன்  பிரசாரம்  ஓய்கிறது.

18வது மக்களவைக்கான தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு, அதன்படி 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஏற்கனவே முதல்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19ந்தேதி நடைபெற்று முடிந்த நிலையில், 2வது கட்ட வாக்குப்பதிவு வரும் 26ந்தேதி நடைபெற உள்ளது.  அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர், ராஜஸ்தான், திரிபுரா, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம் மற்றும் ஜம்மு & காஷ்மீர்  உள்பட 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இதில், கேரளா மாநிலத்தில் உள்ள 20 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. அதேபோல், கர்நாடக மாநிலத்தில் உள்ள மொத்தம் 28 தொகுதிகளில் முதல்கட்டமாக 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், மீதுமுள்ள 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெற இருக்கிறது.

இந்த தேர்தலில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேரள மாநிலம் (வயநாடு தொகுதி) மற்றும், இரண்டு முறை எம்.பி.யும், மூன்றாவது முறையாக பாஜக சார்பில் போட்டியிடும் பாலிவுட் நடிகையுமான ஹேமமாலினி –  உத்தரப்பிரதேச மாநிலம் (மதுரா தொகுதி), ராமாயணம் தொலைக்காட்சித் தொடரில் நடித்து பிரபலமான அருண்கோவில் – உத்தரப்பிரதேச மாநிலம் (மீரட் தொகுதி), இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் மாநில தலைவர் பன்னியன் ரவீந்திரன் மற்றும் பாஜக கேரள தலைவர் கே சுரேந்திரன், காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் எதிராக மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் ஆகியோர் கேரள மாநிலம் திருவனந்தபுரம் தொகுதியில் நேரடியாக களம் காண்கின்றனர்.

இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறவிருக்கும் மாநிலங்கள்

  1. அசாம் – 5 மக்களவை தொகுதிகள்
  2. பீகார் – 5 மக்களவை தொகுதிகள்
  3. சத்தீஸ்கர் – 3 மக்களவை தொகுதிகள்
  4. ஜம்மு மற்றும் காஷ்மீர் – 1 மக்களவை தொகுதி (ஜம்மு)
  5. கர்நாடகா – 14 மக்களவை தொகுதிகள்
  6. கேரளா – 20 மக்களவை தொகுதிகள்
  7. மத்தியப் பிரதேசம் – 7 மக்களவை தொகுதிகள்
  8. மகாராஷ்டிரா – 8 மக்களவை தொகுதிகள்
  9. மணிப்பூர் – 1 மக்களவை தொகுதி (வெளி மணிப்பூர்)
  10. ராஜஸ்தான் – 13 மக்களவை தொகுதிகள்
  11. திரிபுரா – 1 மக்களவை தொகுதி (கிழக்கு திரிபுரா)
  12. உத்தரப் பிரதேசம் – 8 மக்களவை தொகுதிகள்
  13. மேற்கு வங்காளம் – 3 மக்களவை தொகுதிகள்