சென்னை: தமிழக எம்.பி.கள், மத்திய அரசின் தொகுதி மேம்பாட்டு நிதியில் 25% மட்டுமே செலவு செய்துள்ளதாக ஆர்.டி.ஐ எனப்படும் தகவல் பெறும் உரிமை சட்டத்தில் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது.
இதில், மத்திய சென்னை மற்றும் வேலூர் தொகுதி எம்.பி.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து எதுவும் செலவிடப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது. இந்த புள்ளி விவரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
தமிழக எம்பிக்களுக்கு வழங்கப்பட்ட மொத்த நிதியான ரூ.367கோடி நிதியில், வெறும் ரூ.93 கோடியை மட்டுமே செலவிட்டுள்ளனர். மீதமுள்ள ரூ.274 கோடி செலவிடப்படவில்லை. அதாவது தொகுதி மேம்பாட்டுக்காக வழங்கப்பட்ட தொகையில் 75% தமிழக எம்பிக்கள் செலவிடவில்லை என்பது தெரிய வந்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று மக்ளவைத் தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலுக்கான பிரசாரத்தின்போது, எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி, சென்னையில் தேர்தல் பிரசாரம் செய்தபோது, சிட்டிங் திமுக எம்.பி.யான தயாநிதி மாறன் குறித்து கடுமையாக விமர்சித்தார். அப்போது, தயாநிதி மாறன், தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 25 சதவிகிதம் மட்டுமே மக்களுக்காக செலவு செய்துள்ளார் என கூறினார்.
இதனால், அதிர்ச்சி அடைந்த தயாநிதி மாறன், மத்திய சென்னை திமுக எம்.பி. வேட்பாளர் தயாநிதி மாறன், 95% தொகுதி நிதியை பயன்படுத்தியுள்ளேன் என விளக்கம் அளித்ததுடன், எடப்பாடி பழனிச்சாமிக்கு நோட்டீஸ் அனுப்பியதுடன், அவர்மீது நீதிமன்றத்தில் வழக்கும் பதிவு செய்துள்ளார்.
இந்த நிலையில், திமுக எம்.பி. தயாநிதி மாறன், மத்திய அரசின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து எதுவும் செய்யவில்லை என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் தமிழக எம்.பிகள் தங்கள் தொகுதிக்கு எவ்வளவு செலவு செய்தார்கள் என்ற விவரம் கிடைத்துள்ளது. நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்களுக்கு தங்கள் தொகுதி மேம்படுத்துவதற்காக மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட அளவில் நிதி வழங்கி வருகிறது.
சென்னையைச் சேர்ந்த தயானந்த் கிருஷ்ணன் என்ற சமூக ஆர்வலர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ், தமிழ்நாட்டு எம்.பி.க்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதியாக எவ்வளவு வழங்கப்பட்டது? அவற்றில் எவ்வளவு செலவிடப்பட்டிருக்கிறது என்பது குறித்து மத்திய புள்ளியியல் அமைச்சகத்திடம் ஆர்டிஐ சட்டப்படி விவரங்கள் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இதற்கு மத்திய புள்ளியியல் அமைச்சகம் பதில் அளித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள 39 எம்பிக்கள் 2019 – 2024 காலகட்டத்தில், தங்களுக்கு வழங்கப்பட்ட நிதியில் 75% செலவிடவில்லை என்பது தெரியவந்துள்ளது. அதேசமயம், மத்திய அரசின் நிதி வழங்கலும் இந்த காலகட்டத்தில் 44 சதவீதம் குறைந்துள்ளது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
எம்பிக்களுக்கு மத்திய அரசு ஆண்டுக்கு தலா ரூ.5 கோடி தொகுதி மேம்பாட்டு நிதியாக வழங்குகிறது. கொரோனா காலகட்டத்தில் மட்டும் இந்த நிதி நிறுத்தி வைக்கப்பட்டது. அதன்படி, 2020 ஏப்ரல் 6-ம் தேதி முதல் 2021 நவம்பர் 9-ம் தேதி வரை தொகுதி மேம்பாட்டு நிதி வழங்கப்படவில்லை. இந்த காலகட்டம் தவிர்த்து 2019 முதல் 2024 வரையில் ரூ.663 கோடி தமிழ்நாட்டு எம்பிக்களுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ரூ.367 கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இது 44.64 சதவீதம் குறைவு ஆகும்.
இந்த ரூ.367 கோடி நிதியில், தமிழக எம்பிக்கள் வெறும் ரூ.93 கோடியை மட்டுமே செலவிட்டுள்ளனர். மீதமுள்ள ரூ.274 கோடி செலவிடப்படவில்லை. அதாவது தொகுதி மேம்பாட்டுக்காக வழங்கப்பட்ட தொகையில் 75% தமிழக எம்பிக்கள் செலவிடவில்லை என்று கூறப்படுகிறது.
மதுரை சிட்டிங் எம்.பி.யான சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த சு.வெங்கடேசன், தனக்கு வழங்கப்பட்ட நிதியில் பெரும்பாலான நிதியை தொகுதி மேம்பாட்டுத் திட்டங்களுக்கு செலவிட்டுள்ளார்.
அதிகபட்சமாக தென்சென்னை தொகுதி திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியனுக்கு ரூ.14.7 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. குறைந்தபட்சமாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆரணி தொகுதி எம்பி விஷ்ணு பிரசாத்துக்கு ரூ.4.9 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சில தொகுதிகளில் எம்.பி.க்களின் நிதிமூலம் கொண்டுவரப்பட்டுள்ள பல திட்டங்கள் இன்னும் முழுமை பெறாமல் உள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.
அத்துடன், மத்திய சென்னை மற்றும் வேலூர் தொகுதியில் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து எதுவும் செலவிடப்படவில்லை என்று அதில் அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய சென்னை எம்.பி.யாக திமுகவைச் சேர்ந்த தயாநிதி மாறனும், வேலூர் தொகுதி எம்.பி.யாக அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்தும் இருந்து வருகின்றனர். இவர்களே மீண்டும் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.