சென்னை: நாங்கள் ரத்தம் சிந்தி படம் எடுத்த படத்தை தள்ளி போக சொல்ல உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?, நீங்க தான் சினிமாவை குத்தகைக்கு எடுத்திருக் கீங்களா? என நடிகர் விஷால் காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார்.
விஷாலின் ஆவேசமாக பேச்சு தமிழக திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் திரையுலகை கட்டுக்குள் வைத்திருக்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடவடிக்கையை விமர்சித்துள்ளதாக சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு வருகிறது.
தமிழக முதலமைச்சரின் மகனான உதயநிதி ஸ்டாலின் ஆரம்ப காலத்தில் நடிகராக திரையுலகில் புகுந்தவர், அரசியலுக்கு வரமாட்டேன் என கூறினார். ஆனால், பின்னர் தேர்தலில் போட்டியிட்டு தற்போது அமைச்சராக உள்ளார். இவரது பல பேச்சுக்கள் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன. அதுபோல, திரையுலகில் அவரது நடவடிக்கையும் விமர்சனங்களை உருவாக்கி வருகின்றன. ஏற்கனவே 2007-08ல், ரெட் ஜெயண்ட் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார் . 2012 இல், அவர் நடிகராக மாறினார் மற்றும் மற்றவர்கள் தயாரித்த படங்களில் நடித்தார். அப்போதிருந்து, உதயநிதி மிகப்பெரிய தமிழ் திரைப்பட விநியோகஸ்தர்களில் ஒருவராக வளர்ந்தார். பின்னர் 2021 ஆட்சி மாற்றத்திற்கு பிறகு, அவரது பிடியில் தமிழ் திரையுலகில் பிடியில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. . அவரது பட நிறுவனமான ரெட்ஜெய்ன்ட் மூவிஸ், படத்தயாரிப்பு மட்டுமின்றி விநியோகத்திலும் களமிறங்கி, மாநிலம் முழுவதும் உள்ள தியேட்டர்களையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
இந்த நிலையில், இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் உருவாகி இருக்கும் ரத்னம் திரைப்படம் வரும் ஏப்ரல் 26-ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதற்கிடையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று கொண்டு இருக்கும் நிலையில், ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த விஷயால், உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பற்றி தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.
அப்போது, ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தில் உள்ள நபர் ஒருவரிடம் நான் நேரடியாகவே கேட்டேன் தமிழ் சினிமாவை நீங்க தான் குத்தகைக்கு எடுத்து இருக்கீர்களா என்று. அந்த நபரை உதயநிதி ஸ்டாலின் கிட்ட பேசி நிறுவனத்தில் சேர்த்துவிட்டதே நான் தான். ஆனால், அந்த நபரே என்னுடைய படத்தை தள்ளி வர சொல்கிறார். இந்த மாதிரி எல்லாம் செய்யும் போதும் சத்தியமாக என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை.
சினிமாவில் ஒரு வருடைய படத்தை தள்ளி போக சொல்லும் உரிமை யாருக்குமே கிடையாது. சினிமா என்னுடைய கையில் தான் இருக்கிறது என்று ஒருத்தர் நினைத்தாள் அவர் உருப்பட்டதா சரித்திரம் இல்லை.
என்னுடைய படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர் ஏசி-யில் அமர்ந்து இருப்பவர் இல்லை. வியர்வை சிந்தி வட்டிக்கு வாங்கி உழைத்த பணத்தை போட்டு படம் எடுப்பவர். நாங்கள் ரத்தம் சிந்தி படம் எடுத்து அதனை கொண்டு வந்தால் தள்ளி போக சொல்லுவீங்களா? இந்த அதிகாரம் உங்களுக்கு யார் கொடுத்தது என கேள்வி எழுப்பியவர்,
ஏற்கனவே மார்க் ஆண்டனி படத்திற்காக தயாரிப்பாளர் ரூ. 65 கோடி வரை செலவு செய்து இருந்தார் . அந்த திரைப்படத்தை செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று வெளியிட முடிவும் செய்து இருந்தார்.ஆனால், அவர்கள் அதை ஏற்காமல், அவர்கள் குறிப்பிடும் தேதியில் நீங்க வாங்க என்று சொல்கிறார்கள். அதை சொல்வதற்கு நீங்கள் முதலில் யாரு? ஒருவர் வெளியில் கடன் வாங்கி படத்தை எடுத்து இருக்கிறார். எப்போது ரிலீஸ் செய்யவேண்டும் என்று அவருக்கு தெரியும்.
நீங்களும் உங்க படத்தை ரிலீஸ் பண்ணுங்க நாங்களும் எங்களுடைய படத்தை ரிலீஸ் பண்றோம்.
எந்த படத்திற்கு வரவேண்டும் என்று மக்கள் முடிவு செய்யட்டும்.
நீங்க மட்டும் ரிலீஸ் செய்து நீங்க மட்டுமே சம்பாதிக்க வேண்டும் என்று எதாவது விதிகள் இருக்கிறதா?
ஜாலியா நீங்க ஏசி ரூம்ல அமர்ந்து சம்பாதிக்கிறதை நாங்கள் வேடிக்கை பார்க்கணுமா?
நான் சரியான தேதியில் படத்தை இறக்கியதால் தான் மார்க் ஆண்டனி வெற்றிபெற்றது.
இப்போது ரத்னம் படத்துக்கும் பிரச்சனை வரும் பரவாயில்லை பார்த்துக்கொள்ளலாம்”
நடிகர் விஷாலின் ஆவேசமாக பேச்சு திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிறுவனம் மற்றும் அறக்கட்டளை தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்த 2023ம் ஆண்டு வெளியிட்ட டிஎம்கே பைல்ஸ் என்ற ஊழல் குற்றச்சாட்டில் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு இருந்தது.
2023 ஏப்ரல் 14 அன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில், துபாயை சேர்ந்த நோபல் ஸ்டீல் நிறுவனத்தை பயன்படுத்தி உதயநிதி பணமோசடி செய்ததாக அண்ணாமலை குற்றம் சாட்டினார். மேலும், உதயநிதிக்கு ₹2,010 கோடி மதிப்புள்ள ரெட் ஜெயண்ட் நிறுவனம் உட்பட ₹2,039 கோடி சொத்து இருப்பதாகவும் அண்ணாமலை குற்றம் சாட்டியிருந்தார்..
இதற்கு உதயநிதி அண்ணாமலைமீது வழக்கு தொடர்ந்தார். முதலில் பொது வாழ்வில் இல்லாத அவரது குழந்தைகளுக்கும் எதிரான “ஆதாரமற்ற மற்றும் ஊக்கமளிக்கும்” குற்றச்சாட்டுகளுக்காக ₹50 கோடி நஷ்டஈடு கோரி சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பினார். ஆனால், உதயநிதியின் சட்ட நோட்டீசுக்கு பதிலளித்த அண்ணாமலை, உதயநிதி கோரிய நஷ்டஈடு தொகையை மன்னிக்கவும், மன்னிப்பு கேட்கவும் மாட்டோம் என்றார். உதயநிதிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை ஆதரிப்பதற்கு உரிய பொருட்கள் தன்னிடம் இருப்பதாக அண்ணாமலை பதில் கூறினார். இந்த வழக்கு நிலுவையில்உள்ளது.
இதன் தொடர்ச்சியாக, 2023ம் ஆண்டு மே மாதம், கல்லல் குழுமத்திலிருந்து உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்கு ரூ.1 கோடி ரொக்கப் பரிமாற்றம் நடந்துள்ளதாக அமலாக்க இயக்குனரகம் (ED) கூறியது. கல்லால் குழுமத்தின் ₹36.3 கோடி மதிப்புள்ள அசையாச் சொத்தையும் ED பறிமுதல் செய்து, அறக்கட்டளையின் வங்கிக் கணக்கை ₹34.7 லட்சத்தில் முடக்கியது. மேலும், அமைச்சர் . உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையின் அறங்காவலர்கள் கல்லால் குழுமத்திடம் இருந்து ரூ.1 கோடி பெற்றதற்கான காரணத்தை விளக்கத் தவறிவிட்டதாகவும், அதனால் அதன் வங்கிக் கணக்கு இணைக்கப்பட்டதாகவும் ED கூறியது குறிப்பிடத்தக்கது.
நடிகர் விஷால் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன் என தெரிவித்துள்ளார். ஏற்கனவே சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு, கடைசி நேரம் ஜாக வாங்கியவர், கடந்த சில மாதங்களாக மீண்டும் கட்சி தொடங்கவுள்ளதாக கூறி வருகிறார். உரிய நேரத்தில் இயற்கை அழைத்தால் மக்களுக்கான பணிகளை மேற்கொள்வேன் என்ற ரீதியில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
இப்படியான நிலையில் நடிகர் விஷால் நடிப்பில் ஏப்ரல் 26 ஆம் தேதி ‘ரத்னம்’ படம் வெளியாக உள்ள நிலையில், அதற்கு தடங்களை ஏற்படுத்தி வரும் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்ததுடன், மக்களவை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் அண்ணாமலை மற்றும் ராதிகா சரத்குமார் போன்றவர்கைள பாராட்டி வரகிறார்.
அண்ணாமலையின் பேச்சு, செயல்பாடு, பொறுமை, அணுகுமுறை, செய்தியாளர் சந்திப்பில் கோபப்படாமல் பதில் சொல்வது என அனைத்தும், அவர் மற்றும் பாஜகவை எல்லாரும் திரும்பி பார்க்க வைக்கும் வகையில் இருப்பதாகவும், அண்ணாமலைக்கும் வெற்றி கிடைக்கும் என நினைக்கிறேன் என தெரிவித்திருந்தார். அதுபோல, ராதிகா மிகவும் தைரியமானவர். மனதில் இருப்பதை தைரியமாக பேசுவார்கள். குஷ்பூ, நதியா போன்றவர்களும் வெளிப்படையாக பேசுவார்கள் என விஷால் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.