மதுரை: தேர்தல் பத்திரம் விவகாரம் தொடர்பாகபிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மதுரை வழக்கறிஞர் ஒருவர் மதுரை போலீசில் புகார் அளித்துள்ளார்.
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தேர்தல் பத்திரம் விவகாரத்தில், தேசிய கட்சியான பாஜக ரூ.6,986 கோடி நிதி பெற்றுள்ளது. அதுபோல மாநில கட்சிகளில், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், தெலுங்கானா ராஷ்டிரிய சமீதி போன்ற கட்சிகள் அதிக அளவில் நிதிகளை பெற்றுள்ளன. அதிக அளவு கொடுத்தவர்களில் முன்னணியில் இருப்பவர், பிரபல ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களை நடத்தி வருபவரும், லாட்டரி மூலம் மக்களின் கொள்ளையடித்த, மார்ட்டின். இவர்தான் பாஜகவும், திமுகவுக்கும் அதிக அளவில் நிதி கொடுத்துள்ளார். இது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன் என்பவர் தேர்தல் பத்திரம் மூலம், ரூ.6,986 கோடி தேர்தல் பத்திர நிதி பெற்றது தொடர்பாக பிரதமர் மோடி, அமித்ஷா மீது மதுரை போலீசில் புகார் அளித்துள்ளார்.
அவரது மனுவில், மத்திய ஆட்சி அதிகாரத்தில் உள்ள பாஜ மட்டும் 12.4.2019 முதல் 15.2.2024 வரை ₹6,986.5 கோடி தேர்தல் பத்திர நிதியாக பெற்றுள்ளது. அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, சிபிஐ வழக்குகளை எதிர் கொள்ளும் 41 நிறுவனங்கள் பாஜவுக்கு ₹2,471 கோடி நிதியினை அளித்துள்ளன. ₹1,698 கோடி தேர்தல் பத்திர நிதி அமலாக்கத்துறை, சிபிஐ மற்றும் வருமானவரித்துறையினரின் ரெய்டுகளுக்குப் பின் பாஜவிற்கு வழங்கப்பட்டுள்ளது. பாஜவின் முறைகேடான தேர்தல் நிதிக்காக ஒன்றிய அரசின் நிறுவனங்களை பிரதமர் மோடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் பயன்படுத்தி அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளனர்.
இவர்களின் செயலானது இந்திய தண்டனைச் சட்ட பிரிவுகள் கூட்டுச்சதி (120(பி)) மற்றும் மிரட்டி பணம் பறித்தல் ஆகியவற்றின் கீழ் தண்டனைக்குரிய குற்றங்கள் மட்டுமின்றி நாட்டின் மீது நிகழ்த்தப்பட்ட பொருளாதார பயங்கரவாதமாகும். எனவே, இவர்கள் மீது வழக்கு பதிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
திமுகவிற்கு ரூ.509 கோடி தேர்தல் பத்திரம் மூலம் வழங்கிய லாட்டரி அதிபர் மார்ட்டின்!
தேர்தல் பத்திரம் தொடர்பான எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு பிரதமர் மோடி பதில்….