டில்லி
பீகார் மாநில பிரபல அரசியல் வாதி பப்பு யாதவ் தனது கட்சியை காங்கிரஸுடன் இணைத்துள்ளார்.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல அரசியல் பிரமுகரான ராஜேஷ் ரஞ்சன் என்ற பப்பு யாதவ், பல்வேறு கட்சிகள் சார்பில் 5 முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தார். அவர் தற்போது ஜன் அதிகார் என்ற கட்சியை நடத்தி வந்தார். இவர் மனைவி ரஞ்சீத் ரஞ்சன் காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார்.
நேற்று பப்பு யாதவ் டில்லியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் முன்னிலையில் காங்கிரசில் இணைந்தார். காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில், தனது கட்சியையும் காங்கிரசுடன் இணைத்துக் கொண்டார். அப்போது பப்பு யாதவின் மகன் சர்தாக் ரஞ்சன் மற்றும் கட்சியின் தலைவர்கள் உடனிருந்தனர்.
பிறகு பப்பு யாதவ் செய்தியாளர்களிடம்,
“எனக்கு ஒட்டுமொத்த காங்கிரஸ் குடும்பமும் என க்கு அளித்த மரியாதையே போதும். ராகுல் மற்றும் பிரியங்கா இருவரும் ஏராளமான அன்பை எனக்கு அளித்தனர். அவர்களுக்கும், எனது தேசிய தலைவர் கார்கேவுக்கும் நன்றி.
இந்தியாவில் யாரேனும் மக்களின் இதயங்களை வென்றிருந்தால், அது ராகுல் காந்திதான். மக்கள் அவரை நேசிக்கிறார்கள். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது தொடர்பான பிரச்சினையை எழுப்பியதன் மூலம் பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் கவலைகளையும் அவர் எழுப்பியுள்ளார்.
இந்த நாட்டையும், அதன் ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் பாதுகாக்க வேண்டுமென்றால், சர்வாதிகாரிக்கு எதிராகப் போராடும் ராகுல் காந்தியுடன் இணைவதைத் தவிர வேறு வழியில்லை. 2024 நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 2025 பீகார் சட்டசபைத் தேர்தல்களில் நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம்.
காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த நான் போராடுவேன். இந்த விஷயத்தில் எனது முழு பலத்துடன் பணியாற்றுவேன்”
என்று கூறினார்.