டெல்லி: அசாமில் தலைமறைவாக இருந்து வந்த  ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத  அமைப்பின் இந்திய தலைவர் அஜ்மல் ஃபருக்கி தனது  கூட்டாளியுடன்  அசாமில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவில் பல்வேறு நாசகார செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளது ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு. மேலும், நாடாளுமன்ற தேர்தலிலும் குழப்பம் விளைவிக்க முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. இதையொட்டி, பாதுகாப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர். இந்த  நிலையில், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பை சேர்ந்த இருவர் சர்வதேச நாடுகளின் எல்லையை கடந்து அசாமில் ஊடுருவி உள்ளதாக  உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, உளவுத்துறையினர் அசாம்  மாநில காவல் துறைக்கு  தகவல் தெரிவித்தனர் . அதையடுத்து சிறப்பு படைப் பிரிவு அதிகாரிகள் துப்ரியில் தேடுதல் பணியை மேற்கொண்டனர்.

இந்த நிலையில், ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் இந்திய தலைவர்  அசாம் மாநிலத்தில்  துப்ரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமப்பகுதியில் தங்கியிருந்தது தெரியவந்தது. அவர்களை சுற்றி வளைத்த காவல்துறையினர் துப்பாகி முனையில், அஜ்மல் ஃபருக்கி என்கிற ஹரிஸ் அஜ்மல் ஃபருக்கி மற்றும் அவனது கூட்டாளி அனுராக் சிங் என்கிற ரெஹானையும்  கைது செய்தனர்.

இதில் ஃபருக்கி, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் இந்திய பிரிவு தலைவர் என தெரியவந்துள்ளது. இவர் தேசிய புலனாய்வு முகமையால் தேடப்படும் குற்றவாளி. இந்தியாவில் தீவிரவாத செயல்களுக்கு திட்டம் தீட்டுவது, அதற்கான ஆட்களை பணியமர்த்துவது போன்ற பணிகளை கவனித்து வந்துள்ளார். அனுராக் சிங் என்கிற ரெஹான் வங்கதேச பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்கள் இருவரையும் கைது செய்த காவல் துறை அதிகாரிகள், அவர்களை தேசிய புலனாய்வு முகமை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.