மும்பை

மும்பையில் உள்ள ஏர் இந்தியா கட்டிடத்தை மகாராஷ்டிர அரசுக்கு  ரூ.1601 கோடிக்கு விற்பனை செய்ய மத்திய அரசு ஒப்புதலளித்துள்ளது 

மும்பை நகரின் மெரின் டிரைவ் பகுதியில் உள்ள ஏர் இந்தியா கட்டிடம் 1974-ம் ஆண்டு பிரபல கட்டிடக் கலை நிபுணர் ஜான் புர்கியால் கட்டப்பட்டதாகும். சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பே ஏர் இந்தியா கட்டிடம் மையப்படுத்தப்பட்ட ஏ.சி. வசதி, நகரும் படிக்கட்டு உள்ளிட்ட பல வசதிகளுடன் கட்டப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

மும்பையில் மெரின் டிரைவ் கடற்கரையில் 23 மாடிகளுடன் அமைந்து உள்ள ஏர் இந்தியா கட்டிடம் மகாராஷ்டிர அரசின் தலைமைச் செயலகம் அமைந்து உள்ள மந்திராலயாவுக்கு மிகவும் அருகில் உள்ளது.

மத்திய அரசால் ஏர் இந்தியா நிறுவனம் தனியாருக்கு விற்பனை செய்யப்பட்ட போது, நரிமன்பாயிண்ட் கட்டிடம் விற்பனை செய்யப்படவில்லை. ஆகவே அந்த கட்டிடத்தை 1,601 கோடிக்கு வாங்கக் கடந்த ஆண்டு நவம்பரில் மகாராஷ்டிர மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

மகாராஷ்டிரா அரசுக்கு ரூ.1,601 கோடிக்கு ஏர் இந்தியா கட்டிடத்தை விற்பனை செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்து உள்ளது. இந்த தகவலை முதலீடு மற்றும் பொதுச்சொத்து மேலாண்மைத் துறை செயலாளர் துகின் காந்தா பண்டே அவரது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில்

”மத்திய அரசு மும்பை ஏர் இந்தியா கட்டிடத்தை மராட்டிய அரசுக்கு ரூ.1,601 கோடிக்கு வழங்க ஒப்புதல் அளித்து உள்ளது. இதுதவிர ஏர் இந்தியா நிறுவனம் மராட்டிய அரசுக்கு வழங்க வேண்டிய ரூ.298.42 கோடி பாக்கியைத் தள்ளுபடி செய்ய மகாராஷ்ட்டிர  அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது”

என்று கூறப்பட்டுள்ளது.