ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ யோக லட்சுமி நரசிம்மர் திருக்கோயில் அமைந்துள்ளது.

மலைமீது அமைந்துள்ள இந்த கோயிலுக்குச் செல்ல 1,305 படிக்கட்டுகளை ஏறிச் செல்ல வேண்டும்.

இதனால் சிறியவர்கள், வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பலரும் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர்.

இந்த நிலையில் தமிழக அரசு சார்பில் ரூ.9.3 கோடி மதிப்பீட்டில் அடிவாரத்தில் இருந்து ரோப்கார் வசதி செய்யப்பட்டது.

மேலும், 11 கோடி மதிப்பீட்டில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தங்குவதற்கு அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 

இந்த ரோப்கார் உள்ளிட்ட வசதிகளை கடந்த மார்ச் 8ம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார்.

கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி, ரோப்காரை கொடியசைத்து துவக்கி வைத்து, பக்தர்களோடு இணைந்து பயணித்தார்.

ஒரு மணி நேரத்தில் 400 பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய ரோப்கார் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து அப்பகுதி பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது 25 ஆண்டுகால கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றியிருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தனர்.