சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கு நேர் காணல் தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல், இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், தமிழக அரசியல் கட்சிகள் சார்பில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. திமுக சார்பிலும், கடந்த பிப்ரவரி மாதம்  19 ஆம் தேதி முதல் சென்னை அண்ணா அறிவாலயத்திலுள்ள தலைமை அலுவலகத்தில் வழங்கப்பட்டது.  மேலும் போட்டியிட விரும்புபவர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் பிப். 7 ஆம் தேதி மாலை 6 மணிக்குள் வழங்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இதுவரை  திமுக சார்பில் போட்டியிட 2,984 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர்.

இந்த நிலையில்,  விருப்ப மனு அளித்துள்ளவர்களுக்கான நேர்காணல் மார்ச் 10ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக திமுக  பொதுச் செயலாளர் துரைமுருகன்  வெளியிட்டுள்ள அறிக்கையில், நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்பி தலைமைக் கழகத்துக்கு விண்ணப்பம் தந்துள்ளவர்களை கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், வரும் மார்ச் 10-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல், சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேர்காணல் வாயிலாக சந்தித்து தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்புகள் குறித்து ஆராயந்து அறிந்திட இருக்கிறார்.

இந்நேர்காணலின்போது, அந்தந்த மக்களவைத் தொகுதியைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்கள் மட்டுமே இந்நேர்காணலில் கலந்துகொள்ள வேண்டும். வேட்புமனு அளித்தவர்கள், தங்களுக்கான ஆதரவாளர்களையோ, பரிந்துரையாளர்களையோ அழைத்து வரக்கூடாது என்றும் அவர்களையெல்லாம் நேர்காணலுக்கு கண்டிப்பாக அனுமதிக்க இயலாது என்றும் கூறியுள்ளார்.