போபால்
தேர்தல் பத்திரங்கள் வாங்கியவர்களின் பெயர்களை வெளியிட பாஜக விரும்பவில்லை என கார்கே கூறி உள்ளார்.
கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை வாங்குவதற்குத் தடை விதித்த உச்சநீதிமன்றம், இது குறித்த விவரங்களை அளிக்க வேண்டும் எனப் பாரத ஸ்டேட் வங்கிக்கு உத்தரவு பிறப்பித்தது.
ஆனால் தேர்தல் பத்திரம் வாங்கியவர்களின் விவரங்களை வெளியிடுவதற்கான கால அவகாசத்தை ஜூன் 30 ஆம் தேதி வரை நீட்டிக்க பாரத ஸ்டேட் வங்கி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது.
எதிர்க்கட்சிகள் இதைக் கடுமையாக எதிர்த்து வரும் நிலையில், தேர்தல் பத்திரம் வாங்கியவர்களின் பெயரை வெளியிட பாஜக விரும்பவில்லை எனக் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.
அவர்,
”பாஜகவின் பேச்சைக் கேட்டுத் தேர்தல் பத்திரங்கள் ரகசியமாக வழங்கப்பட்டவர்களின் பெயர்களை பாரத ஸ்டேட் வங்கி வெளியிடாமல்,உள்ளது. ஏன் இந்த பெயர்களை மறைக்கிறார்கள்? இதனால் இவர்கள் அனைவரும் கொள்ளையடித்து நன்கொடை வசூல் செய்துள்ளதும், இந்த கொள்ளையை அவர்கள் தொடர விரும்புவதும் தெளிவாகிறது”
எனத் தெரிவித்துள்ளார்.