பாலி

ந்தோனேசியாவின் பாலித் தீவில் முதல் இந்துப் பல்கலைக்கழகம் உருவாகிறது.

உலகின் மக்கள் தொகையில் 7வது பெரிய நாடாகத் திகழும் இந்தோனேசியாவில் 86% மேல் இஸ்லாமியர்கள் உள்ளனர்.இந்நாட்டுக்கு  அதிக இஸ்லாமிய மக்கள் தொகையைக் கொண்ட நாடு என்ற பெருமையும் உள்ளது.சுமார் 17,000க்கும் அதிகமாகத் தீவுகளை உள்ளடக்கிய இந்தோனேசியா உலகின் மிகப்பெரிய தீவு நாடாகவும் விளங்கி வருகிறது.

இந்நாட்டின் தலைநகரான ஜகார்த்தா ஜாவா மாகாணத்தில் அமைந்துள்ளது.  இந்தோனேசியாவின் பாலி தீவில் இந்துக்கள் அதிகம் வசிக்கின்றனர். உலக அளவில் சுற்றுலா மையமாக விளங்கும் இந்த பாலித்தீவில் கடந்த 1993-ம் ஆண்டு இந்து மத ஆசிரியர்களால் கல்வி நிறுவனம் தொடங்கப்பட்டது.

கடந்த 1999-ம் ஆண்டு அது இந்து மத அரசு கல்லூரியாகத் தரம் உயர்த்தப்பட்டது. கடந்த 2004 ஆம் ஆண்டு பாலி தீவின் தலைநகர் டென்பசாரில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வந்த இந்தக் கல்லூரி இந்து தர்ம அரசு நிறுவனமாக (ஐஎச்டிஎன்) மீண்டும் தரம் உயர்த்தப்பட்டது.

தற்போது இந்நிறுவனத்துக்குப் பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கும் ஆணையில் அதிபர் ஜோகோவி விடோடோ கையெழுத்திட்டுள்ளார். இதனால் இந்தோனேசியாவின் முதல் இந்துப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டுள்ளது.  இந்நட்டு அதிபரின் ஒழுங்குமுறை அதிகாரத்தின் கீழ் இந்தப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய இந்து பல்கலைக்கழகத்துக்கு ‘ஐ கஸ்தி பகஸ் சுக்ரிவா ஸ்டேட் இந்து யுனிவர்சிட்டி (யுஎச்என்)’ என்று பெயர்சூட்டப்பட்டுள்ளது. இது இந்து உயர் கல்விக்கான அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கி செயல்பட உள்ளது.

அதிபரின் உத்தரவில் ஐ.எச்.டி.என். நிறுவனத்தில் படிக்கும் மாணவர்கள் உடனடியாக யு.எச்.என். மாணவர்களாக மாற்றப்படுவார்கள் என்றும் ஐ.எச்.டி.என். நிறுவனத்தின் சொத்துகள், ஊழியர்கள் உள்பட அனைத்தும் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.