டில்லி

ந்தியா கூட்டணி வேலை வாய்ப்புகளுக்கான கதவுகளைத் திறக்கும் என்று ராகுல் காந்தி கூறி உள்ளார்.

 

நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில்,

“நமது நாட்டின் இளைஞர்கள் ஒன்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும். மோடியின் நோக்கம் வேலைவாய்ப்பு வழங்குவது அல்ல. அவர் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்காமல் இருப்பதுடன், மத்திய அரசில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பாமலும் மெத்தனம் காட்டுகிறார். 

மத்திய அரசு வழங்கிய தரவுகளின்படி, 78 துறைகளில் 9 லட்சத்து 64 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. முக்கியமான துறைகளைப் பொறுத்தவரை, ரயில்வேயில் 2.93 லட்சம் பணியிடங்கள், உள்துறை அமைச்சகத்தில் 1.43 லட்சம், ராணுவ அமைச்சகத்தில் 2.64 லட்சம் பணியிடங்கள் காலியாகி இருக்கின்றன.

மத்திய அரசிடம் 15 மிகப்பெரிய துறைகளில் 30 சதவீதத்துக்கும் அதிகமான பணியிடங்கள் காலியாக இருப்பது ஏன் என்ற கேள்விக்குப் பதில் உள்ளதா?  பொய்யான வாக்குறுதிகளை வழங்கி வரும் பிரதமரின் அலுவலகத்திலேயே ஏன் அதிக எண்ணிக்கையிலான மிக முக்கியமான பதவிகள் காலியாக உள்ளன? 

பாஜக அரசு நிரந்தர பணிகளை வழங்குவதை ஒரு சுமையாகக் கருதித் தொடர்ந்து ஒப்பந்தப் பணி முறையை ஊக்குவித்து வருகிறது. ஆனால் அவற்றில் பாதுகாப்பும் இல்லை, மரியாதையும் இல்லை. காலியான பணியிடங்களைப் பெறுவது நாட்டின் இளைஞர்களின் உரிமை. நாங்கள் இந்த பணியிடங்களை நிரப்புவதற்கு ஒரு வலிமையான திட்டத்தை உருவாக்கி இருக்கிறோம். 

இந்தியா கூட்டணியின் உறுதிப்பாடு இளைஞர்களுக்கு மூடப்பட்டிருக்கும் வேலைவாய்ப்புக்கான கதவுகளைத் திறப்பதே ஆகும். இந்தியா கூட்டணி நம் நாட்டு இளைஞர்களின் தலைவிதியான வேலையில்லா திண்டாட்டத்தின் இருளை அகற்றி சூரிய உதயத்தை காணும்” 

என்று பதிவிட்டுள்ளார்.