சென்னை: பாஜக கூட்டணியில் ஜான்பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே தமாகா, மக்கள் ஜனநாயக கட்சிகள் இணைந்துள்ள நிலையில், 3வதாக தமிழக மக்கள் முன்னேற்றக் கழகமும் இணைந்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் தேசிய அளவில் பலமாக கூட்டணியை அமைத்துள்ள பாஜக தமிழ்நாட்டில் கூட்டணி அமைப்பதில் தடுமாறி வருகிறது. ஏற்கனவே அதிமுக பாஜக கூட்டணியில் இருந்து கழன்றுகொண்ட நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் மும்முனை போட்டி ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, மற்ற கட்சிகளை இழுக்க அதிமுக, பாஜக போட்டிப்போட்டு செயலாற்றி வருகிறது. பாமக, தேமுதிக, புதிய தமிழகம் கட்சிகளை தங்களது அணிகளுக்கு இழுக்க இரு கட்சிகளும் பேரம் பேசி வருகின்றன. இதில் பேரம் முடிவடையததால், பாமக, தேமுக யாருடன் கூட்டணி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இநத் நிலையில், இன்று பிரதமர் மோடி கலந்துகொள்ளும் பிரமாண்டமான பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதால், மேலும் சில கட்சிகளை இழுப்பதில் பாஜக தீவிரம் காட்டி வருகிறது.
ஏற்கனவே பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் நேற்று அதிகாரப்பூர்வமாக இணைந்தது. முன்னதாக ஜி.கே.வாசனை தமிழ்நாடு பாஜக மேலிடப் பொறுப்பாளர் அரவிந்த் மேனன் சந்தித்துப் பேசினார். அதைத் தொடர்ந்து நேற்று காலையில் பாஜக கூட்டணியில் இணைவதாக வாசன் அறிவித்தார். ஏ.சி.சண்முகம், பாரிவேந்தர் ஆகியோர் ஏற்கெனவே பாஜக கூட்டணியில் உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து பாஜக தலைமையிலான கூட்டணியில் ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் இணைந்திருக்கிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வமாக ஜான் பாண்டியன் அறிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் தாமரை சின்னத்தில் தான் போட்டியிடப் போவதாகவும், எந்த தொகுதி என்பது பேச்சுவார்த்தைக்கு பின்னர் முடிவு செய்யப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவர்களைத்தவிர ஓபிஎஸ் மற்றும் டி.டி.வி.தினகரன் ஆகியோரும் கூட்டணியில் இணைய உள்ளனர். தற்போதைய நிலையில் கூட்டணியை உருவாக்குவதில் பாஜக வேகம் காட்டி வருகிறது.
பாமக, தேமுக பாஜக கூட்டணியில் சேருமா என்பது இன்று மாலை தெரிய வரும்.