ஹவுரா
மேற்கு வங்க காவல்துறையினர் பாலியல் தொழில் நடத்தி வந்த பாஜக நிர்வாகியைக் கைது செய்துள்ளனர்.
காவல்துறையினருக்கு மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மாவட்டத்தில் உள்ள ஒரு ஓட்டலில் பாலியல் தொழில் நடந்து வருவதாக கிடைத்த தகவலின் பேரில் குறிப்பிட்ட ஓட்டலில் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையில் உள்ளூர் பா.ஜ.க. நிர்வாகி சப்யாசி கோஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் 10 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
அந்த ஓட்டலில் அடைத்து வைக்கப்பட்டிருந்த மைனர் சிறுமிகள் மற்றும் பெண்களை காவல்துறையினர் மீட்டுள்ளனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பா.ஜ.க. நிர்வாகி சப்யாசி கோஷை 7 நாட்கள் காவல்துறையினர் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ‘எக்ஸ்’ தளத்தில்,
“ஹவுராவில் உள்ள ஓட்டலில் மைனர் சிறுமிகளை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்த பா.ஜ.க. நிர்வாகி சப்யாசி கோஷ் பிடிபட்டார். இந்த வழக்கில் 11 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பா.ஜ.க. என்பது இதுதான். பெண் பிள்ளைகளை அவர்கள் பாதுகாப்பதில்லை. பாலியல் தொழில் செய்பவர்களைப் பாதுகாக்கிறார்கள்”
என்று பதிவிடப்பட்டுள்ளது.
திருணாமுல் கட்சியைச் சேர்ந்த சந்தேஷ்காளி வன்முறை மற்றும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறித்த குற்றச்சாட்டுகளைத் திசை திருப்புவதற்காக அக்கட்சி முயல்வதாக பா.ஜ.க. குற்றம்சாட்டியுள்ளது. பாஜகவினர் தவறு செய்தவர்கள் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள் என்றும், பா.ஜ.க. அவர்களை பாதுகாக்காது என்றும் தெரிவித்துள்ளனர்.