சென்னை: சென்னையை புரட்டிப்போட்டி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கு, நிவாரணம் கேட்டு ரேசன் அட்டை இல்லாமல் விண்ணப்பித்தவர்களுக்கு விரைவில் ரூ.6,000 வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் வடகிழக்கு பருவமழை காலக்கட்டத்தில், தமிழ்நாட்டில் புயல், மழை வெள்ளம் ஏற்பட்டு, தமிழக மக்களையும், வாழ்வாதாரங்களையும் சீர்குலைத்தது. டிசம்பர் 3, 4ம் தேதிகளில் வந்த மிக்ஜாம் புயல் மற்றும் தொடர் கனமழை காரணமாக சென்னை உள்பட பல பகுதிகளில் வெள்ளத்தில்மிதந்தன. கடந்த 2015 வெள்ளத்தை நினைவில் கொண்டு வந்து, சென்னை மக்களின் வாழ்வாதாரத்தை மீண்டும் சீர்குலைத்து. இந்த மழை வெள்ளம் தாக்கத்தால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள நீர் நிலைகள் நிரம்பியதுடன். அதன் அருகில் இருக்கக் கூடிய பகுதிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. மிக்ஜாம் புயல் கடந்த எட்டு ஆண்டுகளில் சென்னை பார்த்திராத அளவுக்கு கடும் சேதங்களையும் ஏற்படுத்திச் சென்றது.
இந்த நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். மேலும் குடும்ப அட்டை இல்லாதவர்கள், வருமான வரி செலுத்துவோர், அரசு ஊழியர்கள் ஆகியோருக்கு நேரடியாக ரொக்கப் பணம் வழங்கப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
தொடர்ந்து, அதற்கான விண்ணப்பங்களும் பெறப்பட்டது. இதைத்தொடர்ந்து, இந்த நிவாரணத் தொகையை பாதிக்கப்பட்டவர்கள் குடியிருக்கும் பகுதிகளில் உள்ள நியாயவிலைக் கடைகள் மூலம் ரொக்கமாக வழங்கப்பட்டது. ஆனால், பலருக்கு இந்த நிவாரண தொகை கிடைக்கவில்லை. இதில் அரசியல் புகுந்து விட்டதாகவும், ஆள் பார்த்து நிவாரணம் வழங்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன.
இதையடுத்து, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ரேஷன் அட்டை இல்லாத 5.5 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். விண்ணப்பித்தோரின் வீடுகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு தகுதியானவர்கள் கண்டறியப்பட்டனர். இதையடுத்து ரேஷன் அட்டை இல்லாமல் விண்ணப்பித்தவர்களுக்கு விரைவில் மிக்ஜாம் புயல் நிவாரணம் வழக்கப்பட உள்ளது.
கணக்கெடுப்பு பணி நிறைவடைந்த நிலையில், விண்ணப்பித்த தகுதியானவர்களுக்கு நிவாரணம் குறித்து விரைவில் அறிவிப்பு என தகவல் வெளியாகி உள்ளது.