சென்னை: போக்குவரத்து தொழிலாளர்களின் 15ஆவது ஊதிய ஒப்பந்தம் பற்றி பேச்சு நடத்த தமிழ்நாடு அரசு குழு அமைத்து உத்தரவிட்டு உள்ளது. போக்குவரத்து தொழிலாளர்களுடன் பிப்ரவரி 7ந்தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தொல்வி அடைந்த நிலையில், அடுத்தகட்ட பேச்சு வார்த்தை வரும் 21ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், போக்குவரத்து தொழிலாளர்களின் 15ஆவது ஊதிய ஒப்பந்தம் பற்றி பேச்சு நடத்த 14 பேர் கொண்ட குழு அமைத்து போக்குவரத்து செயலாளர் பணீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார். குழுவில் நிதித்துறை கூடுதல் செயலாளர், போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்கள் இடம் பெற்றுள்ளனர்
15வது ஊதிய ஒப்பந்தம், அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சி.ஐ.டி.யூ., அண்ணா தொழிற்சங்கம், ஏ.ஐ.டி.யூ.சி. உள்பட 27 போக்குவரத்து தொழிற்சங்கங்கள் கடந்த மாதம் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்தன. போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வேலை நிறுத்தம் செய்ய இருப்பதாகக் கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் நோட்டீஸ் வழங்கி இருந்தனர்.
அதில், திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டம், 15வது ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இருந்தனர்.
ஆனால், அரசு செவிசாய்க்காத நிலையில், ஜனவரி 9 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பொதுமக்கள் அவதி அடைந்தனர். அதனைத் தொடர்ந்து சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் ரமேஷ் தலைமையில் நேற்றும் போக்குவரத்து தொழிலாளர்கள் உடனான முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்த பேச்சுவார்த்தையில் சுமுகமான முடிவுகள் எட்டப்படாததால் தோல்வியில் முடிவடைந்தது. இதையடுத்து போக்குவரத்து தொழிற்சங்கங்கள் திட்டமிட்டபடி போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனர். இதனையடுத்து 2 கட்டமாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. அதன் தொடர்ச்சியாக 3ஆம் கட்ட பேச்சுவார்த்தை சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் தொழிலாளர் நல இணை ஆணையர் ரமேஷ் தலைமையில் இன்று மதியம் நடைபெற்றது. இதில் 27 தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் அரசு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர்கள் பங்கேற்ற நிலையில், முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.
இதற்கிடையில் இதுதொடர்பாக நீதிமன்றத்தில் பொதுநல வழக்கும் தொடரப்பட்டது. வழக்கை விசாரணை நீதிமன்றம், மக்களின் இன்னலை கருதி பேச்சுவார்த்தை மூலம் சுமுக முடிவை எடுக்குமாறு போக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது.
அதையடுத்து, அரசு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், இதுவரை பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்பட வில்லை. இறுதியாக பிப்ரவரி 7ந்தேதி போக்குவரத்து தொழிலாளர்களுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதிலும் முடிவு எட்டப்படவில்லை. இதையடுத்து அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை வரும் 21ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சி.ஐ.டி.யு. மாநில தலைவர் சவுந்தரராஜன், “ பேச்சுவார்த்தையில் ஓய்வூதியதாரர்கள் பிரச்சினை குறித்து பேசப்பட்டது. 15வது ஊதிய உயர்வு குறித்து பேச அரசு தரப்பில் குழு அமைப்பதாக அரசு தெரிவித்துள்ளது. எனினும் இன்று நடைபெற்ற 3-ம் கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. எந்த தாமதமும் இல்லாமல் ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டிய தொகையை வழங்க வேண்டும். தேர்தல் வாக்குறுதியின்படி பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமலாக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் பழி வாங்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் மீதான நடவடிக்கைகளை திரும்பப் பெற வேண்டும் என்று கூறினார்.
இதைத்தொடர்ந்து, தற்போது போக்குவரத்து தொழிலாளர்களின் 15ஆவது ஊதிய ஒப்பந்தம் பற்றி பேச்சு நடத்த 14 பேர் கொண்ட குழு அமைத்து போக்குவரத்து செயலாளர் பணீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.