மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இரண்டாம் இடம் பிடித்த அபி சித்தர் தனக்கு முதல் பரிசு அறிவிக்க உத்தரவிட கோரி உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா கமிட்டி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு உள்ளது.
பொங்கலையொட்டி, தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றன. ஜல்லிக்கட்டு போட்டிக்கு புகழ்பெற்ற மதுரையில் நடைபெறும் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலகப் புகழ் பெற்றது ஆகும். இங்கு நடைபெறும் போட்டிகளை காண தென் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மக்கள் திரளாக படையெடுத்து செல்வார்கள்.
இந்த நிலையில் இந்தாண்டு கூடுதல் விருந்தாக கீழக்கரை பிரமாண்ட மைதானத்திலும் ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் பரிசு வழங்கப்பட்டதில்குளறுபடி ஏற்பட்டதாக இரண்டாவது இடம் பிடித்த அபிசித்தர் என்ற வீரர் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் மீது குற்றம் சாட்டினார். மேலும் தானே அதிக காலை பிடித்ததாகவும், தனக்குத்தான் முதல் பரிசு வழங்க வேண்டும் என்றும் கூறினார். இது சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த சூழலில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இரண்டாம் இடம் பிடித்த பூவந்தியை சேர்ந்த மாடுபிடி வீரர் அபி சித்தர் தனக்கு முதல் பரிசு அறிவிக்க உத்தரவிட கோரி உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அவரது மனுவில்,” பொங்கல் பண்டிகையையொட்டி உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி 17ம் தேதி நடைபெற்றது. ஜல்லிக்கட்டு போட்டியில் முறையாக ஆன்லைனில் பதிவு செய்து, உடல் தகுதி சோதனையில் கலந்து கொண்டு 2வது சுற்றில் மாடுபிடி வீரராக கலந்து கொண்டேன். 3வது சுற்று வரை 11 காளைகளை அடக்கி விழாக்கமிட்டியால் இறுதிச்சுற்றில் விளையாட வைப்பதாக கூறி வெளியேற்றப்பட்டேன். பின்பு கடைசி சுற்றில் 7 மாடுகளை பிடித்தேன். மொத்தமாக 18 காளைகளை அடக்கினேன்.
ஆனால் விழா கமிட்டி கருப்பாயூரணியை சேர்ந்த மாடுபிடி வீரரான கார்த்திக் 18 காளைகளை அடக்கியதாக கூறி முதல் பரிசை அவருக்கு அறிவித்தனர்.
இதுகுறித்து விழா கமிட்டியரிடம் முறையிட்டும் எனக்கு தகுந்த நீதி கிடைக்கவில்லை. என்னை விட கார்த்திக் என்பவர் 1 காளை குறைவாகவே பிடித்தார். நான் 18 காளைகளை அடக்கியதற்கான வீடியோ ஆராரங்கள் தன்னிடம் உள்ளது. ஜல்லிக்கட்டு போட்டியில் பரிசு அறிவிப்பில் குழப்பம் மற்றும் சில காரணங்களுக்காக கார்த்திக் முதல்பரிசு பெற்றவராக அறிவிக்கப்பட்டுள்ளார். எனவே அதிக காளைகளை அடக்கிய என்னை முதல்பரிசு பெற்ற வீரராக அறிவிக்க வேண்டும் என மனு செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணை செய்த நீதிபதிகள் மனு குறித்து அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா கமிட்டினர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்தி வைத்தனர்.
ஜல்லிக்கட்டு போட்டியில் அரசியல்: அமைச்சர் மூர்த்தி மீது அபிசித்தர் குற்றச்சாட்டு…