திருவனந்தபுரம்: பாஜக நிர்வாகி கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில், தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா கட்சியைச் சேர்ந்த 15 இஸ்லாமியர்களுக்கு தூக்கு தண்டனை விதித்து கேரள நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. இதையடுத்து குற்றவாளிகள் போலீஸ் பாதுகாப்புடன், சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
கேரள மாநிலம் ஆலப்புலா பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் ஸ்ரீனிவாசன். இவர் கேளர மாநில பாஜக ஓபிசி அணி நிர்வாகியாக செயல்பட்டு வந்தார். இவரை, கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் 19ந்தேதி அன்று ஆலப்புழையில் உள்ள அவரது வீட்டுக்குள் ஆயுதங்களுடன் புகுந்த நபா்கள், குடும்பத்தினா் கண்முன்னே அவரை சரமாரியாக கொடூரமாக வெட்டிக் கொன்றனா்.
இந்த சம்பவம் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை கண்டித்து பாஜக சார்பில் போராட்டங்களும் நடைபெற்றது. இதையடுத்து, காவல்துறை வழக்கு பதிவு செய்து, அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளைக்கொண்டு, இந்த கொலையை செய்த, தடை செய்யப்பட்ட இயக்கமான, பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் இந்திய சமூக ஜனநாயக கட்சியை (எஸ்டிபிஐ) சோ்ந்தவர்கள் என்பதும், இந்த கொடூர செயலலில் சம்பந்தபட்ட 15 பேரை கண்டறிந்தது. அவர்கள்மீது,. இந்திய தண்டனைச் சட்டத்தின் 302 (கொலை), 149 (சட்டவிரோதமாக கூடுதல்), 449 (கடுங்குற்றத்தில் ஈடுபடுவதற்காக வீட்டுக்குள் அத்துமீறி நுழைதல்), 506 (மிரட்டுதல்), 120 பி (குற்றச் சதி) உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த வழக்கின் பல்வேறு கட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, டிசம்பர் 20ந்தேதி அன்று இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 15 பேரையும் குற்றவாளிகளாக நீதிமன்றம் அறிவித்தது. அதன்படி, கொலையில் நேரடியாக ஈடுபட்டதாக 8 போ் மீதும், கொலைக்கு உதவியதாக 4 போ் மீதும், சதித் திட்டம் தீட்டியதாக 3 போ் மீதும் குற்றங்கள் உறுதி செய்யப்பட்டன.
இதையடுத்து, குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை (மரண தண்டனை) விதிக்கப்பட வேண்டும் என்றும், இவர்கள் அனைவரும் கொலை செய்ய பயிற்சி பெற்ற குழுவினா் என்பதோடு, தனது தாய், மனைவி, குழந்தை கண் முன்னே ரஞ்சித் கொடூரமாக கொலை செய்யப்பட்ட விதத்தையும் கருத்தில்கொண்டால், இவர்கள்மீது கருணை காட்டாமல் கடுமையான தண்டனை விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
இதையடுத்து இந்த வழக்கில் 15 பேருக்கும் மரண தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. தீர்ப்பில், கொடூர கொலை குற்றவாளிகளான நைசம், அஜ்மல், அனூப், முகமது அஸ்லாம், அப்துல் கலாம், மற்றொரு அப்துல் கலாம், சராஃபுதீன், மன்ஷாத், ஜசீப் ராஜா, நவாஸ், சமீா், நஸீா், சாகீா் ஹுசேன், ஷாஜி, ஷொ்னாஸ் அஷரஃப் ஆகிய 15 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து, நீதிபதி வி.ஜி.ஸ்ரீதேவி பரபரப்பு தீர்ப்பு வழங்கினார்.
தீர்ப்பு வழங்கும்போது, குற்றம் சாட்டம்பட்டிருந்த 15 குற்றவாளிகளில் ஒருவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒள்ளதால், அவா் தவிர 14 பேரும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டிருந்தனா். ஆஜா்படுத்தப்படாத அந்த நபருக்கும் தீா்ப்பு பொருத்தும் என்று நீதிபதி குறிப்பிட்டதாக பிரதாப் கூறினாா்.
தீா்ப்பில், ‘இது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட கொலை; ஒரு மாதத்துக்கு முன்பே ஏற்பாடுகளைத் தொடங்கி, இக்கொடூர கொலையில் குற்றவாளிகள் ஈடுபட்டுள்ளனா். 15 பேரும் தங்களது செயலுக்காக ஒருபோதும் வருந்த வில்லை; அவா்கள் கொடூரக் குற்றவாளிகள் என்பதால் திருந்தி வாழ வாய்ப்பு குறைவு என்ற மாநில அரசின் அறிக்கையையும் நீதிமன்றம் கவனத்தில் கொண்டது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த ரஞ்சித் ஸ்ரீனிவாசனின் மனைவி, ‘எங்களின் இழப்பு மிகப் பெரியது. இந்த வழக்கில் நோ்மையாகவும் முழுமையாகவும் விசாரணை மேற்கொண்டு, குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையைப் பெற்று தந்த அதிகாரிகளுக்கு நன்றி. வழக்கின் தீா்ப்பு திருப்தியளிக்கிறது’ என்றாா்.
கேரள பாஜக மாநிலத் தலைவா் கே.சுரேந்திரன் கூறுகையில், ‘சிறந்த தியாகி ரஞ்சித் ஸ்ரீனிவாசனின் கொலைக்கு நீதி கிடைத்துள்ளது. இறுதியில் உண்மை வென்றுள்ளது. தீா்ப்பை முழு மனதுடன் வரவேற்கிறோம்’ என்றாா்.
பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான வீ.முரளீதரன் வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘பிஎஃப்ஐ பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட ரஞ்சித் ஸ்ரீனிவாசன் குடும்பத்துக்கு நீதி வழங்கப்பட்டுள்ளது. நீதித்துறைக்கு நன்றி.
நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் அச்சுறுத்தலாக இருந்த பிஎஃப்ஐ அமைப்புக்கு பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு தடை விதித்தது சரியே என்பது நிரூபணமாகியுள்ளது’ என்றாா்.