செவ்வாயின் மத்திய பகுதியில் தண்ணீர் கண்டுபிடிப்பு

ஐரோப்பா
செவ்வாய் கிரகத்தின் மத்திய.பகுதியில் தண்ணீர் இருப்பதை ஒரு ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.
பூமியின் அண்டை கிரகங்கள் வெள்ளியும், செவ்வாயும். வெள்ளி மிக அதிக வெப்பத்தை உடையது என்பதால் அங்கு வாழ இயலாது. செவ்வாயில் வெப்பம் குறைவு தான் என்றாலும் முழுக் கோளும் வறண்ட நிலையில் தான் இருக்கிறது. பொதுவாகச் செவ்வாயைப் பூமியின் மிக வறண்ட பகுதியான ‘அடகாமா’ பாலைவனத்துடன் ஒப்பிடுவது உண்டு.
செவ்வாயில் எதிர்காலத்தில் மனிதர்கள் குடியேற வேண்டும் என்றால் தண்ணீர் அத்தியாவசியம். அதனால், அங்குத் தண்ணீர் உள்ளதா என்று பல நாடுகளும் ஆராய்ந்து வந்தன.
செவ்வாயின் துருவப் பகுதியில் தண்ணீர் உறைந்த நிலையில் இருப்பதை ஏற்கனவே அறிவோம். முதல்முறையாகச் செவ்வாயின் மத்தியப் பகுதியில் தண்ணீர் பனிக்கட்டிகளாக இருப்பதை ‘மார்ஸ் எக்ஸ்பிரஸ்’ கண்டறிந்துள்ளது. இது ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தால் செவ்வாய் கோளை ஆராய அனுப்பப்பட்ட விண்கலம் ஆகும்.
இந்தப் பனிப் படலம் 3.7 கி.மீ., ஆழம் கொண்டதாக உள்ளது. இதில் உள்ள நீர், பூமியில் உள்ள செங்கடலின் கொள்ளளவுக்குச் சமமானது. இந்தப் பனிப்படலம் ஆழமாக ஊடுருவக்கூடிய ரேடாரின் உதவியால் கண்டுபிடிக்கப்பட்டது.
பனிப்பாறைகள் பல மீட்டர்கள் அடர்த்தியான மண்ணால் மூடப்பட்டுள்ளன. அவற்றை அகற்றி, பனிப்பாறைகளை அடைவது மிகவும் கடினமானது. அதற்குச் சில பத்தாண்டுகள் ஆகலாம்.
அவற்றை ஒரு முறை அடைந்து விட்டோம் என்றால் எதிர்காலத்தில் செவ்வாயில் நமக்குத் தேவையான அளவு தண்ணீரைக் குறைவின்றி எடுத்துக் கொள்ளலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Patrikai.com official YouTube Channel