சென்னை: தைப்பூசம் திருவிழாவையொட்டி, திருச்செந்தூர் உள்பட முருகன் கோவில்களில் பக்தர்கள் திரண்டு வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
முருகப்பெருமான் வேல் வாங்கிய விழாவான தைப்பூச திருவிழாவை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள முருகன் கோயில்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாழிமலை மற்றும் திருத்தணி, பழமுதிர்சோலை முருகன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. தைப்பூசத்தையொட்டி சென்னை வடபழனி முருகன் கோவிலுக்கு சாரை சாரையாக வரும் மக்கள் – காவடி எடுத்தும், அலகு குத்தியும் வழிபாடு செய்து வருகின்றனர்.
திருச்செந்தூரில் தைப்பூச விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தைப்பூச திருவிழாவையொட்டி ஏராளமான பக்தர்கள், நெல்லை வழியாக திருச்செந்தூருக்கு பாதயாத்திரை செல்கின்றனர். இதேபோல், நெல்லை, தென்காசி மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் குழுக்களாக பாதயாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். நெல்லை சந்திப்பு மேம்பாலத்தை கடந்து செல்லும் பக்தர்கள், குமாரசாமி கோவில் பகுதியில் சூடம் ஏற்றி தேங்காய் உடைத்து, தாமிரபரணி ஆற்றில் புனித நீராடி யாத்திரையை தொடர்கின்றனர். இன்று காலை திருச்செந்தூர் வந்தடையும் பக்தர்கள், அங்குள்ள கடலில் நீராடி முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.
முன்னதாக இன்று அதிகாலை 1 மணிக்கு திருச்செந்தூர் கோவில் நடை திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் தீபாராதனையும் நடைபெற்றது. விழாவையொட்டி காலை 7.30 சுவாமி அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நடந்தது.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் தைப்பூசத்திற்காக மாலை அணிந்து விரதம் இருந்து நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக பக்தர்கள் முருகன் கோயில்களில் குவிந்து வருகின்றனர். தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் முருகன் கோயில்களை நோக்கி பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
தைப்பூசத்திருவிழாவை முன்னிட்டு கடந்த சில நாட்களாகவே விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து விரதமிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக திருச்செந்தூர் கோயிலுக்கு பால்குடம், காவடி எடுத்தும், அலகு குத்தியும் வந்து பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனை முருகன் கோயில்களில் செலுத்தி வருகின்றனர். இதனால் திருக்கோயில் வளாகமே பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. பக்தர்கள் திருக்கோயில் கடலில் புனித நீராடியும், அங்க பிரதட்சணம் எடுத்தும் வேண்டுதல் நிறைவேற்றினர். பக்தர்களின் வசதிக்காக கோயில்களில் சிறப்பு வரிசைகளும், சிறப்பு தரிசன ஏற்பாடுகள் மற்றும் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளன.
தைப்பூசம் என்றாலே பழனியில் வெகு சிறப்பாக திருவிழா நடைபெறும். இதில் பங்கேற்க ஏராளமான பக்தர்கள் பழனிக்கு செல்வது வழக்கம். இதனால் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி போன்ற முக்கிய நகரங்களில் இருந்து பழனிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இன்று பழனியில் திரளான பக்தர்கள் கூடியுள்ள நிலையில் அவர்கள் பால்குடம் எடுத்தும், காவடி எடுத்தும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோயில்கள் ஏ பக்தர்கள் கூட்டம் அதிகளவு காணப்படுகிறது. பக்தர்களின் வருகை அதிகரிப்பதை கருத்தில் முருகனின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை ஆகிய இடங்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.