சென்னை: ராமர்கோவில் கும்பாபிஷேகத்தை கோயில்கள், மண்டபங்களில் நேரலை செய்யக்கூடாது என தமிழ்நாடு அரசு சார்பில் வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தகவல்கள் பரவிய நிலையில், நேரலை செய்யலாம் என உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
ஒரு மாநிலத்தில், நாட்டில் பிற சமூகத்தினர் வசிக்கிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக கோவிலில் நடத்தப்படும் சிறப்பு பூஜைக்கான அனுமதியை நிராகரிக்க முடியாது என்று தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் கோயில்களைத் தூய்மைப்படுத்தும் பணிகளில் பாஜகவினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கோவில்களில் அன்னதானம், கும்பாபிஷேக நிகழ்ச்சி பக்தர்கள் காணும் வகையில் நேரடி ஒளிபரப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. அயோத்தியில் நடைபெறக் கூடிய கும்பாபிஷேகத்தை அருகில் உள்ள கோயிலில் இருந்து பார்க்க வேண்டும் என ஆசை கொண்டு தாமாகவே பலர் நேரடி ஒளிபரப்பு செய்வதற்கான முயற்சிகளை எடுத்தனர்.
ஆனால், திமுக அரசு இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வாய்மொழியாக அறநிலையத்துறை அனுமதி மறுத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான ஆடியோக்களும் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியது. மேலும், திண்டுக்கல் பகுதியில் நிகழ்ச்சி நடத்த மாவட்ட காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், காஞ்சிபுரத்தில் நேரடி ஒளிபரப்பு செய்ய வைக்கப்பட்டிருந்த எல்இடி டிவிக்கள் மற்றும் பந்தல்கள் அகற்றப்பட்டன. இது இந்து மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. தமிழ்நாடு அரசின் நடவடிக்கை சமுக வலைதளங்களில் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டது.
இநத் நிலையில், பாஜக சார்பில் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டது வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ராமர்கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சிகளை, கோயில்கள், மண்டபங்களில் நேரலை செய்யலாம்” என அனுமதி அளித்துள்ளது. இதற்கு காவல்துறை அனுமதி தேவையில்லை என்று கூறிய நீதிபதிகள், ஒருவேளை கூட்டம் அதிகரித்தால், அதை கட்டுப்படுத்த காவல்துறை நடவடிக்கை எடுக்கலாம் என கூறியிருப்பதுடன், கோவில்களில் சிறப்பு பூஜை செய்ய அதிகாரிகளிடம் அனுமதி பெற்று நடத்தலாம் என்றும் உத்தரவிட்டு உள்ளது.
அதுபோல, உச்சநீதிமன்றமும், தமிழ்நாடு அரசு சட்டப்படி அனுமதி வழங்க வேண்டும் என உத்தரவிட்டு உள்ளதுடன், இதுகுறித்து விளக்கம் அளிக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு உள்ளது.
மனுவில்,. உடனடியாக அனுமதி கோரி விண்ணப்பித்த போது, ஏழு நாட்களுக்கு முன் விண்ணப்பிக்கவில்லை என்றும், திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படக் கூடும் எனவும் கூறி அனுமதி மறுத்து நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கின் விசாரணையின்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மற்ற மதத்தினர் வசிக்கும் பகுதி என்பதால் இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க மறுத்ததாகவும், தற்போது அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து கருத்து தெரிவித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மற்ற மத்தினர் வசிக்கிறார்கள் என்பதற்காக ஒரு மத நிகழ்ச்சியை தடுக்க முடியாது என்று கூறியதுடன், தனியார் கோவில்கள் மற்றும் திருமண மண்டபங்களில் நேரலை ஒளிபரப்பு செய்யவோ அல்லது பூஜைகள் மேற்கொள்ளவோ போலீசார் அனுமதி தேவையில்லை என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில் நேரலையோ அல்லது பூஜையோ மேற்கொள்ள வேண்டுமென்றால் கோவில் செயல் அலுவலரிடம் தகவல் தெரிவிக்க வேண்டுமென்றும் பின்னர் உரிய கட்டுப்பாடுகளுடன் செயல் அலுவலர் அனுமதியளிக்க வேண்டுமென்றும் என நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
ஒருவேளை கூட்டம் அதிகரித்தால் அதனை கட்டுப்படுத்த காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ளலாம் எனவும் நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார். மேலும் ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு தமிழ்நாட்டில் எங்கும் பூஜைகள் நிறுத்தப்படவில்லை என்பது தெளிவாகிறது, இது சம்மந்தமாய் வதந்திகளை பரப்பக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்ற வழக்கில், ஒரு மாநிலத்தில், நாட்டில் பிற சமூகத்தினர் வசிக்கிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக கோவிலில் நடத்தப்படும் சிறப்பு பூஜைக்கான அனுமதியை நிராகரிக்க முடியாது என்று தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. பல சமூகங்கள் வசிக்கின்றன என்பதை காரணம் காட்டி பூஜைகளை தடுக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
மேலும், இந்த விஷயத்தில் முறையாக விளக்கம் அளிக்க உச்ச நீதிமன்றம் தமிழ்நாட்டிற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
காவல் துறையை வைத்து மிரட்டுகின்றனர்! நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு – அமைச்சர் பதில்