சென்னை: அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி, தமிழக கோயில்களில் அன்னதானம் மற்றும் எல்ஈடிகள் வைத்துத் திரையிட முயற்சி செய்தால் காவல்துறையை வைத்து மிரட்டுகின்றனர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியுள்ளார்.
இதற்கு பதில் அளித்துள்ள அமைச்சர் சேகர்பாபு, எந்த கோயில்களில் அனுமதிக்கவில்லை என பட்டியலை கேட்டுள்ளார். ஆனால் திண்டுக்கல் பகுதியில் கோவிலில் யாகம், அன்னதானம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ள அரசின் கடிதம் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் கோயில்களைத் தூய்மைப்படுத்தும் பணிகளில் பாஜகவினர் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாகச் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் உள்ள ஏரி காத்த ராமர் கோயிலில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தூய்மைப்பணியில் ஈடுபட்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் நிர்மலா சீதாராமன், “அயோத்தியில் கிட்டத்தட்ட 550 வருடம், சட்ட ரீதியிலான போராட்டத்திற்குப் பிறகு, சுமூகமாக, எந்த விதமான சர்ச்சை, கலவரம் இல்லாமல் அமைதியாக கோர்ட் மூலம் ஆர்டர் வந்து அமைதியான முறையில் அடிக்கல் நாட்டும் பணி நடந்தது. நாட்டின் பலதரப்பட்ட பகுதிகளில் இருந்து மக்களின் பங்களிப்புடன் வரிப்பணம் இல்லாமல் சட்ட ரீதியாக ட்ரஸ்ட் மூலம் சோம்நாத் மந்தீர் போல், அரசு பங்களிப்பின்றி கட்டப்பட்டுள்ள அந்த கோயில் மூலஸ்தானத்தில் நாளை ராமரை நிறுவப்படும் நிகழ்ச்சியில் பிரதமர் கலந்து கொள்ளும் பெரிய நிகழ்ச்சி நடைபெறுகிறது.
நம்ம நாட்டில் மட்டும் அல்ல வெளிநாட்டில் உள்ளவர்களும் கூர்மையாகக் கவனித்துக் கொண்டு இருக்கக் கூடிய ஒரு நிகழ்ச்சி இது. இதற்காக எந்த கட்சி தொடர்பும் இல்லாமல் மக்களே அருகில் உள்ள கோயில்களுக்குச் சென்று ராமர் பாடல்களைப் பாடுவதற்கு, அயோத்தியில் நடைபெறக் கூடிய கும்பாபிஷேகத்தை அருகில் உள்ள கோயிலில் இருந்து பார்க்க வேண்டும் என ஆசை கொண்டு தாமாகவே நிறைய முயற்சிகளை எடுத்தனர்.
ஆனால் நேற்று இரவு நான் வந்ததில் இருந்து எங்களது கட்சியினர் மட்டுமல்லாது பொதுமக்களும், அனுமதி கேட்டால் கடிதத்தை அப்படியே வைத்து விட்டு மறுக்கவில்லையே எனக் கூறுவதாகத் தெரிவிக்கின்றனர். கோயிலில் சிறிய ஏற்பாடுகளைச் செய்யச் சென்றால் கூட போலீசை வைத்து எங்களை மிரட்டுகிறார்கள் எனக் கூறுகின்றனர். ஆனால் மத்திய அமைச்சர் பொறுப்பில்லாமல் வதந்தி பரப்புவதாகக் கூறுகின்றனர். நான் சாதாரணமாக இதுபோன்ற விஷயங்களில் தலையிடக்கூடிய நபர் இல்லை. ஆனால் நேற்று நான் வந்ததில் இருந்து தொடர்ச்சியாக மக்கள் என்னிடம் புகார் தெரிவித்தனர்.
நான் கலந்து கொள்ளக்கூடிய நிகழ்ச்சி குறித்து அரசுக்கு முறையாகத் தெரிவித்தும் கூட, அங்குப் பிரதமர் பங்கேற்கும் அயோத்தி நிகழ்ச்சியைத் திரையிடக்கூடாது என ஒரு சப் இன்ஸ்பெக்டர் அங்கிருந்து மிரட்டினார். இதுகுறித்து நிர்வாகிகள் எனக்கு போனில் தெரிவித்தனர். இரவு வரை அந்த சப் இன்ஸ்பெக்டர் அங்கிருந்து செல்லவில்லை. அந்த நிர்வாகிகள் தொடர்ந்து கலெக்டர், எஸ்பி உள்ளிட்ட அதிகாரிகளிடம் பேசினர். எல்லோரும் உங்கள் கோரிக்கையை மறுத்து கடிதம் வரவில்லையே என ஒரே மாதிரியாகத் தெரிவித்தனர்.
அமைச்சர் சேகர்பாபு போட்டுள்ள ட்விட்லயே பாருங்கள், வரிசையாக மக்கள் மறுக்கப்பட்ட கடிதத்தைப் பதிவிட்டுள்ளனர். நீங்கள் மறுக்கவில்லை இது வதந்தி என்றால், மக்களுக்குக் கோயிலில் சென்று ஏற்பாடுகளைச் செய்வதற்கு எந்த தடையும் இல்லை என நீங்கள் தெரிவித்திருக்க வேண்டும் அல்லவா. இந்து அறநிலையத் துறை இந்து மக்களின் வழிபாடுகளில் கலந்து கொண்டு அவர்களுக்குத் துணையாக இருக்க வேண்டுமா அல்லது எதிர்ப்பாக இருக்க வேண்டுமா?
அறநிலையத்துறை அமைச்சர் இந்துக்களுக்கு ஏதுவாக அவர்களுக்கு ஒத்துழைக்க வேண்டுமே தவிர்த்து இந்த மாதிரி போலீசை வைத்துச் செயல்படக்கூடாது. அவர்கள் மறுக்க மாட்டார்கள், நிராகரிக்க மாட்டார்கள் கடைசி வரை இழுத்தடிப்பார்கள். ஆனால் சிலபேருக்கு மறுத்துள்ளனர். ஆனால் போலீசை வைத்து லைட் போடக்கூடாது, எல்ஈடி போடக்கூடாது என தொழிலாளர்களை மிரட்டுகின்றனர்.
யார் எந்த மதத்தை வேண்டும் என்றாலும் பின்பற்றலாம், பெருமை கொள்ளாலாம். ஆனால் பிறர் மதத்தைத் தவறாகப் பேசக்கூடாது. இந்துவைத் திட்டுவதில் முன்னணியில் உள்ளனரே தவித்து இந்துவும் அவர்களது வாக்காளர்கள் தான் என்பதை மறந்துவிட்டனர். சரித்திரத்தில் இடம்பெறக்கூடிய நிகழ்வு அயோத்தியில் நடைபெறுகிற போது மனதில் வேதனையுடன் நான் ஒன்றைப் பகிர்ந்து கொள்கிறேன்.
நீங்க நாத்தீகம் பேசிக்கொள்ளுங்கள், இந்துக்கு எதிர்ப்பு எனக் கூறிக்கொள்ளுங்கள், ஆனால் இந்துக்களின் தெய்வமான ராமர் மீது செருப்பு மாலை போட்டு ஊர்வலம் போன கும்பல் இது. அதனால் அவர்களிடம் இருந்து வேறு எதுவும் எதிர்பார்க்க முடியாது” எனத் தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து, அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா நிகழ்ச்சியை நேரடியாக ஒளிபரப்பு செய்ய தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ள, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாகர்கோவில் பகுதியில் காவல்துறை உத்தரவு ஒன்றை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதற்கு விளக்கம் அளித்துள்ள அமைச்சர் சேகர்பாபு, மதிப்பிற்குரிய திருமிகு.@nsitharaman அவர்களே, திருக்கோயில்களில் எந்த பூஜை புனஸ்காரங்கள் நடத்துவது என்றாலும், அன்னதானம் வழங்குவது என்றாலும், சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு அதற்குரிய அனுமதியை இந்து சமய அறநிலையத்துறை நிச்சயம் வழங்கும் என குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், சில கோவிலில் அதிகாரிகள் பேசிய ஆடியோக்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும் திண்டுக்கல் கோவிலில் சங்கல்ப யாகம் மற்றும் அன்னதானம் வழங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது தொடர்பான கடிதமும் வெளியாகி உள்ளது. இதன்முலம் அமைச்சர் சொல்வதெல்லாம் பொய் என்பது தெரிய வந்துள்ளது.