ஆந்திர பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவராக ஒய்.எஸ்.சர்மிளா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒய்.எஸ்.சர்மிளாவை ஆந்திர பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவராக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நியமித்துள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார்.
ஆந்திர மாநில தலைவர் பதவியில் இருந்து கிடுகு ருத்ர ராஜு நேற்று ராஜினாமா செய்த நிலையில் இந்த பதவிக்கு ஒய்.எஸ். சர்மிளா உடனடியாக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கானாவில் ஒய்.எஸ்.ஆர்.சி.பி.யின் தலைவராக இருந்த ஒய்.எஸ்.சர்மிளா, சமீபத்தில் தனது கட்சியை காங்கிரசுடன் இணைத்தார். ஒய்.எஸ்.ஷர்மிளா காங்கிரஸில் இணைந்ததில் இருந்தே, அவர் ஆந்திர மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமிக்கப்படுவார் என்று கூறப்பட்டுவந்தது.
இந்த நிலையில், ஆந்திர மாநில பிரிவினைக்குப் பிறகு சரிவை சந்தித்த காங்கிரஸ் கட்சிக்கு மறைந்த ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டியின் மகளும் தற்போதைய ஆந்திர முதல்வர் ஜெகனின் சகோதரியுமான ஒய்.எஸ். சர்மிளாவை கட்சி தலைவராக நியமித்திருப்பது காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் ஊட்டும் விதமாக உள்ளது.