இந்தியில் பெயர் வைத்தால் மட்டுமே மாநில அரசுக்கு நிதி ஒதுக்க முடியும் மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
கேரள மாநிலத்தில் செயல்பட்டு வரும் “குடும்ப ஆரோக்ய கேந்த்ரம்” என்ற சுகாதார திட்டத்திற்கு “ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர்” என்று பெயர்மாற்றம் செய்தால் மட்டுமே மத்திய அரசின் நிதி உதவி கிடைக்கும் என்ற மத்திய அரசின் உத்தரவை ஏற்க முடியாது என்று மாநில அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கேரள மாநில சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ், “”குடும்ப ஆரோக்ய கேந்த்ரம்” திட்டத்தை “ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர்” என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு நவம்பர் 25ம் தேதி உத்தரவிட்டது.
இந்த திட்டத்தில் மத்திய அரசின் லோகோ சேர்க்கப்பட வேண்டும் என்று ஏற்கனவே ஆறு இலச்சினைகளை மத்திய அரசு அனுப்பி வைத்தது.
இதனை ஏற்று “குடும்ப ஆரோக்ய கேந்த்ரம்” திட்ட பெயர் பலகைகளில் அந்த ஆறு இலச்சினைகளும் சேர்க்கப்பட்டது.
தற்போது புதிதாக “ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர்” என்று பெயர் மாற்றம் செய்ய வலியுறுத்தியதால் இதற்கு 50 கோடி ரூபாய் வரை செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெயர் மாற்ற விவகாரத்தில் கேரள அரசு தனது இந்தி எதிர்ப்பு நிலைப்பாட்டில் தீர்க்கமாக இருக்கும் நிலையில் இந்த சுகாதார திட்டத்திற்கான மத்திய அரசு நிதி நிறுத்தப்பட்டது.
இதனால் சுகாதார பணியாளர்களுக்கு மாத சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன் டயாலிசிஸ் தேவைப்படும் நோயாளிகளுக்கு தேவையான 7 கோடி ரூபாயும் முடக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கூட்டாட்சி, மதச்சார்பின்மை மற்றும் பொது சுகாதாரக் கொள்கைக்கு எதிரான மத்திய அரசின் இந்த உத்தரவை கேரள அரசு செயல்படுத்தப்போவதில்லை” என்றும் “இந்த திட்டத்திற்கான நிதியை மாநில அரசே ஏற்று செயல்படுத்தும்” என்றும் அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.