சென்னை: புறநகர் பகுதியான கிளாம்பாக்கத்தில் கட்டுப்பட்டு வந்த புதிய பேருந்து நிலையம், இன்று முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கப்படுகிறது. இந்த புதிய பேருந்து நிலையத்தில் என்னென்ன வசதிகள் உள்ளன, எந்த வகையானபேருந்துகள் இங்கிருந்து புறப்படும் என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
இன்று திறக்கப்படும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து தென்மாவட்ட பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தற்போது தெற்கு நோக்கி செல்லும் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு செல்லும் SETC, TNSTC, PRTC, மற்றும் தனியார் பேருந்துகள் (ஆம்னி) ஆகிய பேருந்துகள், இனி கிளாம்பாக்கத்தில் உள்ள புதிய கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திற்கு மாற்றப்பட்டு அங்கிருந்த இயக்கப்பட உள்ளது.
SETC மற்றும் தனியாருக்குச் சொந்தமான ஆம்னிபஸ்களின் செயல்பாடுகள் உடனடி நடைமுறையுடன் தொடங்கும், அதே நேரத்தில் TNSTC மற்றும் PRTC ஆகியவை பற்றி பின்னர் தெரிவிக்கப்படும் என சிஎம்டிஏ தெரிவித்து உள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ள சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் மிகப்பெரிய பேருந்து நிலையம். இது 1999 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் அப்போதைய முதல்வராக இருந்த கருணாநிதியின் உத்தரவின்பேரில் கட்டுமானம் தொடங்கப்பட்டது. பின்னர் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு 2002 ஆம் ஆண்டு முதல்வராக பதவியேற்ற ஜெயலலிதா திறந்து வைத்தார். இந்த பேருந்து நிலையத்திற்கு புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் பேருந்து நிலையம் என பெயரிட்டிருந்தார். 160 பிளாட்பார்ம்களை கொண்ட இந்த பேருந்து நிலையத்தில் இங்கு லாக்கர் ரூம்கள், ஹோட்டல்கள், சிறிய உணவு கடைகள், ஏடிஎம்கள், 10 டிராவல் ஏஜென்சி அலுவலகங்கள், தங்கும் இடங்கள் என ஏராளமான வசதிகள் உள்ளன. இருந்தாலும் பண்டிகை காலங்களில், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.
இதைத்தொடர்ந்தே, கடந்த அதிமுக ஆட்சியின்போது வண்டலூர் தாண்டி சென்னை புறநகர் பகுதியில், கிளாம்பாக்கம் என்ற இடத்தில், தென்மாவட்ட பேருந்துகள் புறப்படும் வகையில், பேருந்து நிலையம் கட்ட அடிக்கல் நாட்டுப்பட்டு பணிகள் தொடங்கின. ஆனால், இடையில் கொரோனா பெருந்தொற்று காரணமாக பணிகள் தொய்வடைந்த நிலையில், திமுக ஆட்சி பதவி ஏற்றதும், மீண்டும் பணிகள் விறுவிறுப்பு அடைந்தன. மேலும், இந்த பேருந்து நிலையத்திற்கு கருணாநிதி நூற்றாண்டு பேருந்து நிலையம் என பெயர் மாற்றப்பட்டதுடன், பல்வேறு மாற்றங்களும் செய்யப்பட்டன.
இதையடுத்து 2022ம் ஆண்டே இந்த பேருந்து நிலையம் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இடையில் பெய்த மழை காரணமாக, பேருந்து நிலையம் வாசல் பகுதி மற்றும் பல இடங்களில் மழைநீர் தேங்கியது. இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது. இதையடுத்து, திறந்து விழா ஒத்தி வைக்கப்பட்டு, மழைநீர் மழைநீர் வடிகால் பணிகள் செயல்படுத்தப்பட்டு வந்தது.
இதைத்தொடர்ந்து, கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் 2024 ஜனவரி 15 அல்லது 16ந்தேதி பொங்கல் பண்டிகையையொட்டி திறக்கப்படும் என எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், தமிழ்நாடு அரசு திடீரென டிசம்பர் 30ந்தேதி முதலமைச்சர் ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட உள்ளதாக அறிவித்து உள்ளது.
புதிய கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையத்தை விட பெரியது. அதாவது 88 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இந்த பேருந்து நிலையத்தின் மதிப்பு ரூ 400 கோடியாகும். மேலும் பேருந்து முனையம் முழுவதும்குளிர்சாதன வசதி செய்யப்பட்டு உள்ளதுடன், சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், மழை நீர் வடிகால்கள், சூரிய தகடுகள், பொருத்தப்பட்டு, தேவையான வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.
இதுமட்டுமின்றி, இங்கு 28.25 ஏக்கர் பரப்பளவில் வாகன நிறுத்துமிடம் ஒதுக்கப்பட்டு, 2285 பார்க்கிங் வசதிகள், 500 தனியார் பேருந்துகளை நிறுத்துமிடங்கள், உள்ளிட்ட வசதிகள் உள்ளன. மேலும், பயணிகளின் வசதிக்காக கடைகள், உணவகங்கள், ஏடிஎம் உள்பட பல வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. மேலும், பாலூட்டும் தாய்மார்களுக்கான அறை, காவல் கட்டுப்பாட்டு அறைகள், போக்குவரத்து அலுவகலகங்கள் உள்ளிட்டவை உள்ளன. தனியாக காவல் நிலையமும் அமைக்கப்பட்டு வருகிறது.
அதாவது, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் மொத்த பரப்பளவு 90 ஏக்கர், இதில் பேருந்து நிலையத்திற்கு ஒதுக்கப்பட்ட நிலம் 59,86 ஏக்கர், மற்ற இடத்தில் தரைதளம் மற்றும் முதல் தளம் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதில் 8 புறநகர் பேருந்து நடைமேடை, 11 மாநகர் பேருந்து நடைமேடை, கட்டப்பட்டுள்ளது. அதில் 226 புறநகர் பேருந்துகள் நிறுத்தும் அளவில் கட்டப்பட்டுள்ளது.
மேலும், 324 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடம்,2729 இரு சக்கர வாகனம் நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளன.
அத்துடன், மாநகரப் பேருந்து அலுவலகம் , எரிபொருள் நிரப்பும் இடம், காவலர் அறை மற்றும் கண்காணிப்பு கேமரா அறைகள், 13.50 கிலோ லிட்டர் கீழ்த்தள நீர்த் தேக்கத் தொட்டி, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம், மின் நிலையம், ஏடிஎம் இயந்திரம் மற்றும் நேரக் காப்பாளர்களுக்கு 25 அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதுமட்டுமின்றி, ஆறு உணவகங்கள், 100 கடைகள், தாய்ப்பால் ஊட்டும் அறை, அவசர சிகிச்சை மையம், மருந்தகம், பாதுகாப்பு அறைகளும் கட்டப்பட்டு உள்ளன.
பயணிகளின் வசதிக்காக பேருந்து நிலையத்தின் , தரைதளத்தில் 12 கழிவறைகளும், முதல் தளத்தில் 12 கழிவறைகளும் அமைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பயணிகள் தங்கும் அறைகள், பணியாளர்கள் ஓய்வெடுக்கும் அறைகள், உள்ளிட்டவைகளும் பேருந்து நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பேருந்து நிலைய வளாகத்திற்குள் மறைந்த முதலமைச்சர் கருணாநிதி சிலையையும் அமைக்கப்பட்டு உள்ளது. இதை இன்று முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
இந்த புதிய பேருந்து நிலையத்தில் இருந்து, தென் தமிழகமான கன்னியாகுமரி, மதுரை, தூத்துக்குடி, திருச்சி, நெல்லை, திருவண்ணாமலை, செங்கோட்டை, தஞ்சை, விழுப்புரம் ஆகிய பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் கியூஆர் கோடு டிக்கெட்டுகள் வழங்கப்படும்.
மேலும் பயணிகள், பொதுமக்கள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை எளிதாக பயன்படுத்தும் வகையில் மற்ற இடங்களில் இருந்து கிளாம்பாக்கம் வர போதுமான போக்குவரத்து வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இநத் பேருந்து நிலையமானது ஊரப்பாக்கம் ரயில் நிலையம் கிளாம்பாக்கத்திலிருந்து 1 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. ஊரப்பாக்கம் ரயில் நிலையத்தை அடையும் வகையில் நடைமேம்பாலம் எனப்படும் ஸ்கைவாக் அமைக்கப்படுகிறது. கண் பார்வையற்றவர்களும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் பிரெய்லி பலகைகள் வைக்கப்படுகின்றன. இதனால், கிளாம்பாக்கத்தில் ஒரு ரயில் நிலையம் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இது விரைவில் நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், சென்னை மெட்ரோ ரயில் வழித்தடம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்வரை நீட்டிக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. இதன் மூலம் சென்னையின் தென் புறநகர் பகுதியினர் பயனடைவர், மேலும் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசலும் குறையும்.
இதுமட்டுமின்றி, ஜிஎஸ்டி சாலை மட்டுமல்லாது வெளிப்புற வட்ட சாலை, ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் வகையில் புதிய பாதை அமைக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த கிளாம்பாக்கம் (𝐊𝐚𝐥𝐚𝐢𝐠𝐧𝐚𝐫 𝐂𝐞𝐧𝐭𝐞𝐧𝐚𝐫𝐞𝐧𝐚𝐫𝐲 Bus Terminus at 𝐊𝐢𝐥𝐚𝐦𝐛𝐚𝐤𝐤𝐚𝐦) டிசம்பர் 30ந்தேதி (இன்று) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
இந்த பேருந்து நிலையத்தின் செயல்பாடும் பராமரிப்பும் ஒரே ஒரு சலுகையாளருக்கு வழங்கப்பட்டுள்ளது, இது 15 ஆண்டுகளுக்கு ஒரு ஆன்லைன் டெண்டர் ஏல முறையின் மூலம் மாநிலத்தின் தனித்துவமான மற்றும் முதல் வகையான ஏற்பாட்டில் நியமிக்கப்பட்டுள்ளது.
கிளம்பாக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் திறப்பு விழாவை அறிவிக்கும் போது, மேம்பட்ட மற்றும் திறமையான பொதுப் போக்குவரத்து வலையமைப்பை நோக்கிய பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் கொண்டாடுகிறோம் என சிஎம்டிஏ தெரிவித்து உள்ளது.
மேலும் விரிவான விவரங்களுக்கு சிஎம்டிஏ இணையதளத்தை பார்க்கவும்.
https://www.linkedin.com/posts/chennai-metropolitan-development-authority-cmda-_travel-advisory-kalaignar-centenary-bus-activity-7146552622609498112-XACL?utm_source=share&utm_medium=member_desktop