சென்னை: மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் உடல், கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில்  உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் இறுதி மரியாதை செலுத்த, 72 குண்டுகள் முழங்க முழுஅரசு மரியாதையுடன்  இறுதிச்சடங்கு நடைபெற்றது.

தேமுதிக தலைவர் கேப்டன்  விஜயகாந்த் அடக்கம் செய்யப்படும் சந்தனப்பேழையில் ‘புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த்’ என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.

தேமுதிக நிறுவனத்தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் நேற்று (டிசம்பர் 28ந்தேதி)  காலை 6.10 மணியளவில் உயிரிழந்தார். அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் வைக்கப்பட்டு பின்னர் தேமுதிக அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து  இன்று காலை 6மணி முதல் பொதுமக்கள் மற்றும் ரசிகர்களின் அஞ்சலிக்காக விஜயகாந்தின் உடல் தீவுத்திடலில் வைக்கப்பட்டது.

அங்கு  அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், அரசியல்வாதிகள், தொண்டர்கள், ரசிகர்கள் என பலரும் மதியம் 2.30 மணிவரை அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து  மதியம் 1மணி அளவில் விஜயகாந்த் உடல் இறுதி ஊர்வல வாகனத்தில் ஏற்றப்பட்டது. தீவுத்திடலில் இருந்து கோயம்பேடு தேமுதிக அலுவலகம் நோக்கி இறுதி ஊர்வலமாக வந்தடைந்தது. வழிநெடுகிலும் தொண்டர்கள், பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

இந்த இறுதிச் சடங்கில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டு தனது மரியாதையை செலுத்தினார். அமைச்சர்கள், அரசியல் பிரமுகர்கள் பலரும் இறுதிச் சடங்கில் பங்கேற்றனர். மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் முக்கிய சொந்தங்கள் மட்டுமே இறுதிச்சடங்கில் பங்கேற்றனர்.

இந்நிலையில், ‘புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த்’ என எழுதப்பட்ட சந்தனப்பேழையில் வைத்து நடிகர் விஜயகாந்தின் உடல் சற்று முன் நல்லடக்கம் செய்யப்பட்டது. விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த், மகன்கள் விஜய பிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் உள்ளிட்ட குடும்பத்தார் கண்ணீர்மல்க அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

விஜயகாந்த் இல்லாத வெற்றிடத்தை எண்ணி மேலும் பல திரைப் பிரபலங்களும் ரசிகர்களும் தேமுதிக தொண்டர்களும் தொடர்ந்து சமூக  வலைதளங்களில் அவரை நினைவுகூர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.

வீடியோ உதவி: Thanks ANI

 

பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றவர் ‘கேப்டன் விஜயகாந்த்’ – வாழ்க்கை வரலாறு