“மாண்புமிகு நிதி அமைச்சரின் அப்பா வீட்டு பணத்தை கேட்கவில்லை” மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்
தமிழ்நாட்டின் சமீபத்தில் பெய்த கனமழையால் தூத்துக்குடி, நெல்லை, குமரி, தென்காசி, ஆகிய தென் மாவட்டங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஒருவாரம் ஆகியும் இயல்பு நிலை திரும்பவில்லை.
மக்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து இதனை தேசிய பேரிடராக அறிவித்து தமிழகத்தில் வெள்ள மீட்பு மற்றும் புணரமைப்பு பணிகளுக்காக சுமார் 12000 கோடி ரூபாய் நிதி ஒதுக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை வைத்தார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகத்துக்கு ஏற்கனவே இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ரூ. 450 கோடியும் டிசம்பர் மாதம் ரூ. 450 கோடியும் வெள்ள நிவாரண நிதியாக மத்திய அரசு தாராளமாக வழங்கியதாக கூறினார்.
மேலும், மழை குறித்து வானிலை ஆய்வு மய்யம் முன்னறிவிப்பு செய்த நிலையில் மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததை அடுத்தே இந்த பாதிப்பு ஏற்பட்டது என்றும் அதனால் மீண்டும் நிதி வழங்க முடியாது என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.
தவிர, தமிழக அரசு நிவாரண நிதி கேட்டவுடன் கொடுக்க இது என்ன ஏ.டி.எம்.மா என்று மத்திய அமைச்சரின் சமீபத்திய பேச்சுக்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின் “நாங்க ஒன்னும் அவங்க அப்பா வீட்டு காச கேக்கலை, தமிழக மக்களின் வரிப்பணத்தை தான் கேட்கிறோம்” என்று உதயநிதி பேசியது குறித்து நிர்மலா சீதாராமன் விமர்சித்தார்.
இந்த நிலையில், இதற்கு பதிலளித்துள்ள தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “மீண்டும் சொல்கிறேன் மாண்புமிகு ஒன்றிய நிதியமைச்சர் திருமதி.நிர்மலா சீதாராமன் அவர்களின் ‘மரியாதைக்குரிய’ அப்பா வீட்டுப் பணத்தை நாம் கேட்கவில்லை. தமிழ்நாடு அரசு கோரிய பேரிடர் நிவாரண நிதியைத்தான் கேட்கிறோம்.
யாரிடம் எப்படி பேச வேண்டும் என்று தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா – முத்தமிழறிஞர் கலைஞர் – கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எங்களுக்கு நன்றாகவே சொல்லிக் கொடுத்துள்ளார்கள்.
சிலரிடம் அண்ணாவைப் போல – சிலரிடம் கலைஞரைப் போல – சிலரிடம் கழகத்தலைவரைப் போல பேசுகிறோம்.…
— Udhay (@Udhaystalin) December 22, 2023
வழக்கமாக ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் மாநில பேரிடர் நிவாரண நிதியை தந்து விட்டு, ஏதோ ஒன்றிய அரசின் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தந்தது போல அடித்துப் பேச வேண்டாம்.
நாங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் ‘மரியாதை’ தருவதற்கு தயாராகவே இருக்கிறோம் – தமிழ்நாட்டு மக்கள் மீது கொஞ்சமாவது ‘அக்கறை’ வைத்து நிதியைத் தாருங்கள் மரியாதைக்குரிய மாண்புமிகு ஒன்றிய நிதி அமைச்சர் அவர்களே” என்று பதிலடி கொடுத்துள்ளார்.