திருச்சி
வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு நாளையும் நாளை மறுநாளும் இரு விரைவு ரயில்கள் ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல உள்ளது.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் விமரிசையாக நடைபெறும். அதில், மார்கழி மாதம் நடைபெறும் திருஅத்யயன உற்சவம் எனப்படும் வைகுண்ட ஏகாதசி திருவிழா தனித்துவம் மிக்கது. நடப்பு ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த 12 ஆம் தேதி இரவு 7 மணி அளவில் திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
கடந்த 13-ம் தேதி திருமொழி திருநாள் எனப்படும் பகல் பத்து உற்சவம் தொடங்கியது. உற்சவத்தின்போது, ஒவ்வொரு நாளும் வெவ்வேறு அலங்காரத்தில் நம்பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த விழாவின் சிகர நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு வருகிற 23-ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்த சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நம்பெருமாளுடன் பரமபத வாசலை கடந்து செல்வார்கள்.வரும் 24 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி இரவு 8 மணிவரை திறந்திருக்கும். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரியப்பன் தலைமையில் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.
வைகுண்ட ஏகாதசி விழாவுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காகத் திருச்சி ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் நாளையும், நாளை மறுநாளும் 2 விரைவு ரயில்கள் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. அதாவது சென்னை – கன்னியாகுமரி விரைவு ரயிலும், சென்னை – கொல்லம் விரைவு ரயிலும் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.