சென்னை: சென்னை உள்பட 4 மாவட்டங்களை புரட்டிப்போட்ட மிக்ஜாம் புயல் பாதிப்பு – மீட்பு பணி – எதிர்க்கட்சிகள் விமர்சனம் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். நேர்மையான நிர்வாகம் நடத்துவது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு பிடிக்கவில்லை என குற்றம் சாட்டி உள்ளார்.
நடப்பாண்டு வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் அவ்வப்போது லேசானது முதல் கனமழை வரை பொழிந்து வருகிறது. இதற்கிடையில் வங்கக்கடலில் உருவான ‘ மிக்ஜாம் புயல் காரணமாக டிசம்பர் 3 மற்றும் 4-ம் தேதி பெய்த கனமழையால் சென்னை வெள்ளத்தில் மிதந்தது. நகரின் பல்வேறு பகுதிகள் வெள்ள நீரால் சூழப்பட்ட நிலையில், மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டுக்குள் முடங்கும் நிலை ஏற்பட்டது. உணவு தட்டுப்பாடு, மின்தடை, செல்போன் இணைப்புகள் துண்டிப்பு என சென்னையே ஸ்தம்பித்தது. இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது.
சென்னையில் மழைநீர் வடிகாலுக்கு திமுகஅரசு ரூ.400 கோடி ஒதுக்கி பணிகளை முடுக்கி விட்டதுடன், இனிமேல் ஒருசொட்டு தண்ணீர் கூட தேங்காது என்று முதலமைச்சர் உள்பட அமைச்சர்கள் கூறி வந்த நிலையில், , மழைநீர் மீண்டும் தேங்கியது கடுமையாக விமர்சிக்கப்பட்டது. மீட்புப்பணியில் அமைச்சர்கள் உள்ளிட்டவர்கள் களத்தில் நின்றும் மக்களை முழுமையாக காப்பாற்ற முடியாத நிலைதான் சில நாட்கள் நீடித்து. இதனால், பொதுமக்கள் உள்பட பலரும் மழை நீர் வடிகால் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நாலாயிரம் கோடி ரூபாய் என்னாச்சு என கேள்வி எழுப்பி, சமுக வலைதளங்களில் டிரெண்டிங்காக்கினர். இதையடுத்து, பணிகள் பாதிதான் முடிவடைந்து உள்ளது என அமைச்சர் நேரு விளக்கம் அளித்தார்.
இந்த நிலையில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், சென்னையில், வரலாறு காணாத பெருமழை பெய்துள்ளது; அதுதான் காரணம். ஜனகராஜ் என்ற நீர்வளத்துறை ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறிய கருத்தை நீங்கள் அனைவரும் கேட்டிருப்பீர்கள்.
“இந்த மழையை சமாளிக்க நாலாயிரம் கோடி அல்ல… 40 ஆயிரம் கோடி இருந்தாலும் போதாது” என கூறி இருப்பார். நிச்சயமாக அதுதான் உண்மையும் கூட. டிசம்பர் 4 மற்றும் 5-ம் தேதி பெய்த மழை என்பது 145 ஆண்டுகள் இல்லாத அளவிலான ஒரு மழை. டிசம்பர் முதல் தேதியிலிருந்து 5-ம் தேதி வரை 5 சென்டிமீட்டர் மழை மட்டுமே பதிவாகும். ஆனால் இம்முறை மீனம்பாக்கத்தில் ஒரே நாளில் 50 சென்டிமீட்டரும், நுங்கம்பாக்கத்தில் 58 சென்டிமீட்டரும் கொட்டியுள்ளது. இது இயல்பை விட பத்து மடங்கு அதிகம்.
வடகிழக்கு பருவமழையை பொறுத்தவரைக்கும் இந்த ஆண்டு 48 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது. மழை வரும் பொழுது மழை நீரை கடல் உள்வாங்க வேண்டும். ஆனால், இந்த மழையின் போது புயல் காரணமாக அலையின் வேகம் என்பது அதிகமாக இருந்தது. நானே நேரடியாக அடையார் முகத்துவாரங்களில் சென்று பார்வையிட்டேன். அப்போது மழை நீரை கடல் உள்வாங்கவில்லை.
வெள்ள நீரை கடல் உள்வாங்காததால் சென்னை முழுவதும் வெள்ள நீர் தேங்கக் கூடிய சூழல் ஏற்பட்டது. புயல் கரையை கடந்த பிறகு அடுத்த நாளே 60 சதவீத வெள்ள நீரை கடல் உள்வாங்கியது. இரண்டாவது நாள் 80 சதவீதம் கடலுக்குப் போய்விட்டதால் சென்னை இயல்புக்கு திரும்பியது. மின்சாரம் துண்டிக்கப்பட்ட இடங்களில் மின்சாரம் கொடுக்கப்பட்டது. மூன்றாவது நாளிலிருந்து இன்று வரை நிவாரணம் கொடுக்கப்பட்டு வருகிறது.
மத்தியிலிருந்து வந்த மத்திய குழு அதிகாரிகள், “2015-ம் ஆண்டை ஒப்பிடும்போது இது பெருமழை. அப்போது 10 நாட்களுக்கு மேலாக மீட்புப் பணிகள் நடந்தது. ஆனால், இப்போது இவ்வளவு சிறப்பாக பணிகளை முடித்திருக்கிறீர்கள்” என பாராட்டு தெரிவித்தார்கள். பணிகள் விரைவாகவும் சிறப்பாகவும் செய்ததால் தான் மாற்றுக் கருத்துடைய டிடிவி தினகரன் மற்றும் கமல்ஹாசன் போன்றவர்களும் அரசைப் பாராட்டி உள்ளார்கள் என்றார்.
4 ஆயிரம் கோடி என்னாச்சு?
எவ்வளவு செலவு செய்தோம் என்பது முக்கியமல்ல. நாலாயிரம் கோடி என்பது திட்ட மதிப்பீடு. நாலாயிரம் கோடி செலவு செய்திருந்தாலும் சரி… 40 ஆயிரம் கோடி செலவு செய்து இருந்தாலும் சரி… இதே பாதிப்புத்தான் ஏற்பட்டிருக்கும். ஏனெனில் மழையின் அளவு என்பது அதிகம். சென்னையைப் பொறுத்தவரை அடையாறு, ஓட்டேரி உள்ளிட்ட 22 நீரோடைகள் உள்ளது. அவையெல்லாம் தூர்வாரப்பட்டன. வளர்ந்த நாடுகளிலேயே இத்தகைய பாதிப்பு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. மழைநீர் வடிகால் பணிகள் சிறப்பாக நடைபெற்றதால் தான் மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்றது. 40 முதல் 50 சென்டிமீட்டர் வரை மழை பெய்யும் பொழுது பாதிப்பு என்பது இயல்பான ஒன்று. அரசாங்கத்தின் துரித நடவடிக்கையால் தான் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு துரிதமாக திரும்பி உள்ளார்கள். உயிர் சேதம் என்பது முழுமையாக தவிர்க்கப்பட்டிருக்கிறது.
பச்சை பொய் என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி விமர்சனம்
தூய்மையான நிர்வாகம் நடத்துவது எடப்பாடி பழனிசாமிக்கும் அவரது முன்னாள் அமைச்சர்களுக்கும் பிடிக்கவில்லை. விஜயபாஸ்கர் இருந்தவரை மருத்துவர்கள் பணிநியமனம், செவிலியர்கள் பணி நியமனம் உள்ளிட்டவற்றில் வெளிப்படை தன்மை என்பது இல்லாத நிலை இருந்தது. தற்பொழுது அந்த நிலை மாறி எல்லாவற்றிலும் வெளிப்படையான நிர்வாகம் நடைபெற்று வருகிறது.
மருத்துவர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த களப்பணியில் இருக்கக்கூடிய ஊழியர்களை சென்று கேட்டால் தெரியும் இது எவ்வளவு நேர்மையான நிர்வாகம் என்று. இத்தகைய நேர்மையான, ஒழுக்கமான நிர்வாகம் நடத்துவது அவர்களுக்கு பிடிக்கவில்லை.
எடப்பாடி பழனிசாமியைப் பொறுத்தவரை நிர்வாகத்தில் எது நிறை, எது குறை என்பதை புரிந்துகொள்ள முடியாத ஒரு மனிதர். இவர் எப்படி முதலமைச்சராக இருந்தார்… எப்படி எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. அவருக்கு நிர்வாகமும் தெரியாது ஒன்றும் தெரியாது. அதனால்தான் மழை நீர் கட்டமைப்பு குறித்து விவாதிக்க அவருக்கு அழைப்பு விடுத்தேன்.
சேலத்தில் மருந்து மாத்திரைகள் இல்லை என்று கூறினார். அவர் கூறிய மூன்று மணி நேரத்திற்குள் சேலத்திற்குச் சென்று அவர் எந்த மாத்திரை மருந்து இல்லை என்று சொன்னாரோ அது பொய்க் குற்றச்சாட்டு என்று அங்கேயே போய் நிரூபித்தேன். திமுக அரசு அமைந்த பிறகு தான் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பாம்பு கடிக்கான மருந்தும் நாய் கடிக்கான மருந்தும் கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் நல்லாட்சி, மக்கள் விரும்பும் ஆட்சி மீது புழுதி வாரி தூற்றப்பார்க்கிறார்கள். அது நிச்சயம் நடக்காது. மக்களே இவர்களுக்கு தக்க பதிலடி கொடுப்பார்கள்.
நிச்சயமாக கிடையாது. அவர்களுடைய தகுதி அவ்வளவுதான். அரசின் நடவடிக்கைகளை குறைசொல்ல முடியாதவர்கள் இதனைச் செய்கிறார்கள். அது அவர்களின் தரத்தை காட்டுகிறது. இதுபோன்ற தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு மக்கள் பணிகள் மூலமாக நாங்கள் பதிலடி கொடுத்துக் கொண்டே இருப்போம்.
மனசாட்சியோடு பேச வேண்டும். வெறும் கரன்டியில் பாத்திரம் சுழற்றுவது சுலபம். அதிமுக ஆட்சியில் எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை. அப்போது அவர்கள் வெள்ளத்தை செயற்கையாக உருவாக்கினார்கள். நாடாளுமன்றத்தில்கூட 2015 வெள்ளத்தை ‘Man made flood’ என்றே குறிப்பிட்டார்கள்.
அப்போது வானிலை மையம் தொடர்ச்சியாக எச்சரிக்கையைக் கொடுத்தார்கள். அப்போதே செம்பரம்பாக்கம் ஏரி நீரைக் குறைத்திருக்க வேண்டும். ஆனால், அப்போது அதிகாரிகளால் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவைத் தொடர்பு கொள்ளவே முடியவில்லை. திடீரென ஒரே நாளில் அதிகளவில் நீரைத் திறந்துவிட்டதே பாதிப்பிற்குக் காரணம்.
அப்போது எடப்பாடி பழனிசாமியும் ஜெயக்குமாரும் அமைச்சர்களாக இருந்தார்களே… அவர்கள் ஏன் அப்போது நடவடிக்கை எடுக்கவில்லை. கொரோனாவில் மக்கள் கொத்துக் கொத்தாக செத்து மடிந்தபோது, மக்களுக்கு 5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று எங்களுடைய தளபதியார் கோரிக்கை விடுத்தார். ஆனால் இவர்கள், ஆயிரம் ரூபாய் கொடுத்தார்கள். எனவே, அவர்களுக்கு இது குறித்து பேச எந்த தார்மிக உரிமையும் இல்லை.
வெள்ளம் தொடர்பாக மக்கள் போராட்டம்
வெள்ள நிவாரணப் பணிகள் சரியில்லை என மக்கள் நடத்திய போராட்டம் ஒரு சிலரின் தூண்டுதலின் பேரில் நடந்தது. அவர்கள் யார் எப்படியெல்லாம் திட்டமிட்டார்கள் என்பது எங்களுக்கு நன்றாக தெரியும். அதேசமயம், பாதிக்கப்பட்ட மக்கள் போராடுவது இயல்பு. அதனை நாங்கள் மதிக்கிறோம். போராட்டம் நடத்திய மக்களுக்கு எங்களுடைய நிலைமையை எடுத்துக் கூறியபோது அவர்களே போராட்டத்தை முடித்துக்கொண்டார்கள்.
ஊடகவியலாளர்களை திமுகவினர் மிரட்டும் செயல்
அது தவறு. யார் செய்தாலும் அது கண்டிக்கத்தக்கது. அதேசமயம், ஊடகங்களும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் அல்லவா? எந்த ஒரு விசாரணையும் இல்லாமல், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு விளக்கம் பெறாமல் பிரேக்கிங் வேண்டும் என்பதற்காக இல்லாத ஒன்றை இருப்பதாக கூறுவது
டிரெண்டிங் – பொணந்தின்னி மா.சு
கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் இறந்த குழந்தையை அட்டைப் பெட்டியில் வைத்துக் கொடுத்ததாகக் கூறித்தான் ‘பொணந்தின்னி மா.சு’ என ட்ரெண்ட் செய்தார்கள் அதற்குக் காரணம் ஊடகங்கள். அந்த விவகாரத்தில் கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணிற்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளனர். அது முடியாத பட்சத்தில் அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அதைத் தொடர்ந்து தான் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளனர். அவர்கள் இங்கு வருவதற்கு முன்பாகவே குழந்தை இறந்துள்ளது.
அதன் பின்னர் குழந்தையின் உடல் மருத்துவமனையில் உள்ள பிணவறைக்கு கொண்டுசெல்லப்பட்டபோது உடற்கூராய்வு செய்ய வேண்டாம் என குழந்தையின் தந்தை வலியுறுத்தினார். அதன் அடிப்படையில் அவரிடம் குழந்தையின் உடல் ஒப்படைக்கப்பட்டது. மழை பெய்ததால் குழந்தையின் உடலை துணி சுற்றி மழையில் நனையாமல் இருக்க அட்டைப் பெட்டியில் வைத்துக் கொடுத்துள்ளனர். இருப்பினும் அட்டைப் பெட்டியில் வைத்ததற்காக அந்த ஊழியரை நாங்கள் பணியிடை நீக்கம் செய்துள்ளோம்.
அட்டைப் பெட்டியில் இருந்த குழந்தையின் உடலில் துணி சுற்றப்பட்டதா இல்லையா என்பது ஊடகங்களுக்குத் தெரியுமா… தெரியாது. அதுவே தெரியாமல் செய்தி போட்டுள்ளனர். குழந்தையின் தந்தை எடுத்துக்கூறிய பிறகு அந்தச் செய்தியை யாரும் பதிவிடவில்லை. ஊடகங்களும் இப்படி ஒருதலைபட்சமாக நடந்துகொள்ளக் கூடாது இல்லையா?
இவ்வாறு கூறினார்.