டெல்லி: நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்ட தமிழ்நாட்டைச்சேர்ந்த திமுக எம்பி.க்கள், காங்கிரஸ் எம்.பி.க்கள் 5 பேர் உள்பட மக்களவையில் மொத்தம் 14 எம்.பி.க்களும், மாநிலங்களவையில் ஒருவரும் என மொத்தம் 15 எம்.பி.க்கள் இந்த கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்து மக்களவை மற்றும் மாநிலங்கள் தலைவர் அறிவித்து உள்ளனர்.
நாடாளுமன்றத்தின் இன்றைய அலுவல்கள் தொடங்கியதும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலகக் கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. பின்னர் அவை தொடங்கியதும் மீண்டும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டுதுடன் சபாநாயகர் எச்சரிக்கையை மீறி செயல்பட்டனர். அவ்வாறு செயல்பட்ட திமுக எம்.பி. கனிமொழி, காங்கிரஸ் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, கம்யூனிஸ்டு எம்.பி.க்கள் சு.வெங்கடேசன், நடராஜன் ஆகிய 5 எம்.பி.க்களும் அவை நடவடிக்கைக்கு இடையூறு செய்ததாக சஸ்பெண்டு மக்களவை சபாநாயகர் நடவடிக்கை எடுத்துள்ளார். அதன்படி, நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்தகுளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 4-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி வரை 19 நாட்கள் 15 அமர்வுகளுடன் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தின் நேற்றைய (டிசம்பர் 13ந்தேதி) அமர்வின், மக்களவை நேற்று நடைபெற்று கொண்டிருந்தபோது பார்வையாளர் அரங்கில் இருந்து அத்துமீறி நுழைந்த 2 இளைஞர்கள், புகை குப்பிகளை வீசினர். இதனால் அங்கிருந்த எம்.பி-க்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடினர். இதற்கிடையில் மற்றொரு தரப்பு எம்.பி.க்கள், அவர்களை மடக்கிப் பிடித்த நிலையில், பின்னர் இருவரும் அவை பாதுகாவலர்களால் கைது செய்யப்பட்டனர்.
அதேவேளையில், மக்களவையின் உள்ளே நுழைந்தவர்களுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்திற்கு வெளியே புகை குப்பிகளை வீசிய மகாராஷ்டிராவை சேர்ந்த நீலம் என்ற பெண்ணும், அன்மோல் ஷிண்டே என்பவரும் கைது செய்யப்பட்டனர். அத்துமீறி உள்ளே நுழைந்தவர்களில் மனோ ரஞ்சன் என்பவர் மைசூருவை சேர்ந்த பொறியியல் மாணவர் என்பதும், மற்றொருவர் சாகர் சர்மா என்பதும் தெரிய வந்தது.
மேலும், மைசூர் தொகுதி பாஜக எம்.பி பிரதாப் சிம்ஹாவின் பரிந்துரை கடிதத்தை காண்பித்து இருவரும் மக்களவைக்குள் நுழைய அனுமதி சீட்டு பெற்றதாக தெரிகிறது. இதையடுத்து கைது செய்யப்பட்ட 4 பேரையும் நாடாளுமன்ற சாலை காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இருவரும் புகையை உமிழும் பொருளை வீசியதாகவும் இதனால் கண்கள் எரிந்ததாகவும் நேரில் பார்த்த எம்பிக்கள் தெரிவித்தனர். அவர்கள் இருவரும், பாரத் மாத ஹி ஜெய் மற்றும் சர்வாதிகாரம் கூடாது என்று கோஷம் எழுப்பியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது
இதனிடையே மக்களவையில் இருவர் அத்துமீறி நுழைந்ததைத் தொடர்ந்து நாடாளுமன்றம் உடனடியாக ஒத்திவைக்கப்பட்டது. இது நாடாளுமன்ற பாதுகாப்பில் மிகப்பெரிய குறைபாடு இருப்பதை காட்டுவதாக காங்கிரஸ் கட்சியின் மக்களவைக் குழுத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உள்ளிட்ட எம்பிக்கள் குற்றம் சாட்டினர். இந்த அத்துமீறல் சம்பவம் சாதாரண விஷயமில்லை என்றும் எம்.பி.க்கள் கூறினர்.
இதையடுத்து, உள்துறை செயலர் அஜய் பல்லா நாடாளுமன்றத்தில் ஆய்வு செய்தார். அத்துமீறல் சம்பவத்தை தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்ட இரு அவைகளும் சிறிது நேரத்திற்கு பிறகு கூடின. பின்னர், அத்துமீறல் சம்பவம் தொடர்பாக நாளை விவாதிக்கப்படும் எனக் கூறி, நாள் முழுவதும் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, , நாடாளுமன்றத்தின் இன்றைய அலுவல்கள் வழக்கம்போல் காலை 11மணி அளவில் தொடங்கியது. அவை தொடங்கியதும் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். வழக்கமான அலுவல்களை ஒத்திவைத்து விட்டு நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு குறைபாடு குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பினர். மேலும் உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலகக் கோரியும் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து மதியம் 2 மணி வரை மக்களவையும், பிற்பகல் 12 மணி வரை மாநிலங்களவையும் ஒத்திவைக்கப்பட்டது.
முன்னதாக இன்று காலையில் மக்களவை கூடியதும், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்து பேசுகையில், “மக்களவையில் நடந்த சம்பவத்திற்கு அனைவரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். நாம் அனைவரும் பார்வையாளர்களுக்கான பரிந்துரை கடித்தத்தை கவனமாக வழங்க வேண்டும். வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்களை தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படும்” என்று கூறினார்.
அப்போது, பாதுகாப்புக் குறைபாடு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கோரி எதிர்கட்சி எம்.பி.க்கள் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. சபாநாயகர் ஓம் பிர்லா, காங்கிரஸ் எம்.பி.க்களின் பெயர்களை குறிப்பிட்டு, அமளில் ஈடுபட வேண்டாம் என்று வலியுறுத்தினார்.
பின்னர் பிற்பகல் அவை தொடங்கியதும் மீண்டும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். தமிழக காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி உட்பட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இது அவை நடவடிக்கைக்கு இடையூறாக இருந்தது. இதையடுத்து, அவை நடவடிக்கைக்கு இடையூறாகச் செயல்பட்டதாகக் கூறி, ஜோதிமணி, ரம்யா ஹரிதாஸ், டி.என்.பிரதாபன், ஹிபி இடன், டீன் குரியகோஸ் ஆகிய 5 எம்.பி.க்களையும் சபாநாயகர் ஓம் பிர்லா சஸ்பெண்ட் செய்தார். அவர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பி அமளியில் ஈடுபட்ட திமுக எம்.பி. கனிமொழி, காங்கிரஸ் மாணிக்கம் தாகூர், கம்யூனிஸ்டு எம்.பி.க்கள் சு.வெங்கடேசன், நடராஜன் ஆகிய 4 பேரையும் சபாநாயகர் சஸ்பெண்டு செய்தார்.
இவர்களை இடைநீக்கம் செய்யும் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதையடுத்து, சபை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது. இவர்கள், அனைவரும் தற்போது நடைபெற்று வரும் குளிர்காலக் கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்க தடை விதிக்கப்பட் டிருக்கிறது.
மக்களவையில் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ள எம்.பி.க்கள் விவரம்:
மக்களவையில் இருந்து 15 எம்.பி.,கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். முதலில் மாநிலங்களவையில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன் சஸ்பெண்டு, செய்யப்பட்டு, அவர் வெளியேறாத நிலையில், அவைக்காவலர்கள் மூலம் வெளியேற்றப்பட்டார்.
தொடர்ந்து, மக்களவையில், காங்கிரஸ் எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், பென்னி பெஹனன், கே ஸ்ரீகண்டன், முகமது ஜாவேத் (அனைவரும் காங்கிரசைச் சேர்ந்தவர்கள்); பி.ஆர்.நடராஜன் மற்றும் எஸ்.வெங்கடேசன் (இருவரும் சி.பி.எம்), கனிமொழி மற்றும் எஸ்.ஆர் பார்த்திபன் (இருவரும் தி.மு.க), மற்றும் சி.பி.ஐ.,யின் கே சுப்பராயன்.டி.என் பிரதாபன், ஹிபி ஈடன், எஸ் ஜோதிமணி, ரம்யா ஹரிதாஸ் மற்றும் டீன் குரியகோஸ் ஆகிய ஐந்து காங்கிரஸ் எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்வதற்கான தனி தீர்மானத்தையும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கொண்டு வந்தார். இந்த தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.