ஐதராபாத்: நாளை தெலுங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், வாக்குப்பதிவுக்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்பட அனைத்து பொருட்களும் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கும் பணி தொடங்கி உள்ளது. வாக்குப்பதிவையொட்டி, பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
119 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்டு தெலுங்கானா மாநிலத்தில் நாளை சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தொகுதிகளில், 2,290 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். இந்த தேர்தலில் 3.17 கோடி வாக்காளர்கள் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்ற தயாராக உள்ளனர். 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியா்கள் தோ்தல் பணியில் ஈடுபட உள்ளனா். 119
2024 லோக்சபா தேர்தலுக்கு முன் நடைபெறும் கடைசி சட்டமன்ற தேர்தல் தெலுங்கானாவில் நாளை நடைபெற உள்ளது. ஏற்கனவே 5 மாநில தேர்தல் தேதிகளை அறிவித்த இந்திய தேர்தல் ஆணையம் இதுவரை 4 மாநிலங்களில் வாக்குப்பதிவை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. அதன்படி, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம், சத்தீஸ்கர் ஆகிய 4 மாநிலங்களில் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் நாளை தெலுங்கானா மாநிலத்தில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3 ஆம் தேதி அறிவிக்கப்படும்.
தெலுங்கானாவில் கடந்த 2014ஆம் ஆண்டு துவங்கியதில் இருந்து பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) ஆட்சியில் உள்ளது, காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க தீவிரமான போராட்டத்தை நடத்தி வருகிறது. பாரதீய ஜனதா கட்சியும் தென் மாநிலத்தில் தாக்கத்தை ஏற்படுத்த கடுமையாக உழைத்து வருகிறது. இதனால் அங்கு மும்முனை போட்டி நிலவுகிறது.
தெலுங்கானா மாநிலத்தில் மொத்தம் உள்ள 119 சட்டப்பேரவைத் தொகுதிகளில் காங்கிரஸ், பாஜக, ஆளும் பிஆர்எஸ் ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன. ஆட்சியை கைப்பற்ற பாஜக, காங்கிரஸ் கட்சிகள் தீவிரம் காட்டி வரும் நிலையில், ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள முதலமைச்சர் சந்திரசேகரராவும் தீவிரமாக பணியாற்றி உள்ளார். இதனால் மும்முனைப் போட்டி நிலவுகிறது.
பி.ஆா்.எஸ். தலைவரும் முதல்-மந்திரியுமான சந்திரசேகர ராவ், அவரது மகனும் அமைச்சருமான கே.டி.ராம ராவ், தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவா் ரேவந்த் ரெட்டி, பாஜக எம்.பி.க்களான பண்டி சஞ்சய் குமாா், டி.அரவிந்த், சோயம் பாபு ராவ் உள்பட மொத்தம் 2,290 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.
சந்திரசேகர ராவ் கஜ்வெல் மற்றும் காமரெட்டி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறாா். அவரது தலைமையிலான பி.ஆா்.எஸ். கட்சி, அனைத்துத் தொகுதிகளிலும் களமறங்கியுள்ளது. பா.ஜ.க. 111 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சியான ஜனசேனா 8 இடங்களிலும் வேட்பாளா்களை நிறுத்தியுள்ளன.
காங்கிரஸ் ஒரு தொகுதியை தனது கூட்டணி கட்சியான மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கு அளித்துள்ளது. மற்ற 118 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. மாநில காங்கிரஸ் தலைவா் ரேவந்த் ரெட்டி, கோடங்கல் மற்றும் காமரெட்டி ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறாா்.
அசாதுதீன் ஒவைசி தலைமையிலான அகில இந்திய மஜ்லிஸ் கட்சி, ஐதராபாத்தில் 9 தொகுதிகளில் களத்தில் இருக்கிறது.
நாளை தேர்தல் நடைபெற உள்ளதால், நேற்று மாலையுடன் அதாவது நவம்பர் 28 மாலை 5 மணியுடன் அனல்பறக்கும் பிரசாரம் முடிவடைந்தது.
இதைத் தொடர்ந்து, சட்டமன்றத் தேர்தல் 2023 காரணமாக, நவம்பர் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவித்து ஹைதராபாத் மாவட்ட ஆட்சியர் அனுதீப் துரிஷெட்டி உத்தரவிட்டார். மேலும் தனியார் நிறுவனங்களுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
2024 லோக்சபா தேர்தலுக்கு முன், இந்தியாவின் புதிய அரசாங்கத்தை தேர்ந்தெடுக்கும் கடைசி தேர்தல் இது என்பதால் நாட்டு மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான கடைசித் தேர்தலில், ஐந்து மாநிலங்களில் மொத்தமுள்ள 679 இடங்களில் எந்த கட்சி அதிக இடங்களை பிடிக்கும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இந்த 5 மாநில தேர்தல் முடிவுகள், 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோடியாக அமையும் என ‘அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.