பருத்திவீரன் படவிவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா-வுக்கும் இயக்குனர் அமீருக்கும் இடையே நடைபெற்று வந்த அறிக்கை போருக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ஞானவேல்ராஜா.
ஜப்பான் திரைப்பட விழாவுக்கு கார்த்தி-யை வைத்து இயக்கிய இயக்குனர்கள் பலரும் அழைக்கப்பட்ட நிலையில் அவரது முதல்படமான பருத்திவீரனை இயக்கிய அமீர் மட்டும் அழைக்கப்படவில்லை.
இதுகுறித்து வருத்தம் தெரிவித்த இயக்குனர் அமீர் தனக்கும் நடிகர் சிவகுமார் குடும்பத்திற்குமான நட்பில் விரிசலை ஏற்படுத்தியவர் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா என்று கூறியிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுத்த ஞானவேல் ராஜா “பருத்திவீரன் படத்தை தயாரிக்க நினைத்து இயக்குனர் அமீருக்கு முதலில் பணம் கொடுத்த தனக்கு இதனால் 2 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக கூறியதோடு அமீர் இந்தப் படத்தை நன்றாக இயக்குவாரா என்று கார்த்திக்கு சந்தேகம் எழுந்ததாகவும் அவரை நான் தான் நடிக்க அழைத்துவந்ததாகக் கூறி தன்னைப் பற்றி விமர்சிக்க அமீருக்கு தகுதியில்லை” என்று காட்டமாக கூறியிருந்தார்.
இதனால் கடந்த ஒருவாரத்துக்கும் மேலாக இந்த விவகாரம் சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இயக்குனர் அமீருக்கு ஆதரவாக மூத்த இயக்குனர் பாரதிராஜா மற்றும் இயக்குனர் கரு. பழனியப்பன் ஆகியோர் அறிக்கை வெளியிட்டனர்.
இதில் ஞானவேல்ராஜாவை கண்டித்த அவர்கள் அமீரிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் அறிவுறுத்தியிருந்தனர்.
இந்த நிலையில் அமீர் குறித்து அவரது மனது புண்படியாக பேசியதற்கு மன்னிப்பு கோரி அறிக்கை வெளியிட்டுள்ளார். ஞானவேல்ராஜாவின் இந்த அறிக்கையை அடுத்து பருத்திவீரன் தொடர்பான சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது.