ஜெய்ப்பூர்
நேற்று நடந்து முடிந்த ராஜஸ்தான் சட்டசபைத் தேர்தலில் 74% வாக்குப் பதிவாகி உள்ளது.
ஏற்கனவே மத்தியப் பிரதேசம், சத்தீஷ்கார், மிசோரம் ஆகிய 3 மாநிலங்களில் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், 4-வது மாநிலமாக ராஜஸ்தானுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 200 தொகுதிகள் உள்ள ராஜஸ்தானில் கரன்பூர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் மரணம் அடைந்ததால் அங்கு மட்டும் வாக்குப்பதிவு தள்ளிவைக்கப்பட்டது.
தேர்தலில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 1,862 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்றைய தேர்தலில் 5.25 கோடிக்கு அதிகமான வாக்காளர்கள் இருப்பதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. வாக்காளர்கள் வாக்களிக்க 199 தொகுதிகளில் 51 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குச்சாவடிகள் நிறுவப்பட்டு நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
பல இடங்களில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு காணப்பட்டது. \ மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறுத்தப்பட்ட போது, பல வாக்குச்சாவடிகளில் அதிகமான கூட்டம் காணப்பட்டது. ஆகவே 6 மணிக்கு முன் வந்த வாக்காளர்களுக்கு டோக்கன் கொடுத்து, 6 மணிக்குப் பின்னரும் ஓட்டுப்போட அனுமதிக்கப்பட்டனர்..
தேர்தல் ஆணையம் ராஜஸ்தான் சட்டசபைத் தேர்தலில் 74 சதவீத வாக்குகள் பதிவானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமைத் தேர்தல் அதிகாரி பிறவீண் குப்தா இறுதி வாக்குப்பதிவு புள்ளி விவரங்கள் தொகுக்கப்பட்ட பின் வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.
நேற்று மாலை வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் மூடி ‘சீல்’ வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புப் படையினரின் கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளன.