சென்னை: வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் வாய்ப்பு உள்ளதால், நாளை முதல் தொடர்மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று சென்னை உட்பட 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்க கடலில் நாளை அதாவது நவம்பர் 14ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதால் தமிழ்நாடு புதுச்சேரி காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என்றும் இன்னும் ஒரு வாரத்திற்கு தொடர் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது
இன்று மாலை 5 மணிக்கு மேல் கடலோர மாவட்டங்களில் நல்ல மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் கடடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.
நாளை, காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால், புதுச்சேரி, நெய்வேலி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பகுதிகளில் மழை ஆரம்பிக்கும் என்றும் அதன் பிறகு மெல்ல மெல்ல தீவிரமடைந்து சென்னை உள்ளிட்ட பகுதிகளிலும் இதர தென் மாவட்டங்களிலும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மழை பெய்யும் என்றும் கூறப்படுகிறது.
நாளை காலை முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக டெல்டா பகுதிகளில், தென் மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும் என்று கூறப்படுகிறது. தீபாவளி அன்று இடைவெளி விட்ட மழையானது வங்க கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தொடர் மழையாக வாய்ப்புள்ளது.