சென்னை
சென்னை உயர்நீதிமன்றம் பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உள்ளது.

சென்னை அருகே உள்ள பனையூரில் பாஜக கொடிக்கம்பத்தை அகற்றும்போது மாநகராட்சியின் ஜே.சி.பி. இயந்திரத்தை சேதப்படுத்திய விவகாரத்தில் பா.ஜ.க. நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 6 பேரை காவல்துறையினர் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் அமர் பிரசாத் ரெட்டி தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. எனவே அமர் பிரசாத் ரெட்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார்.
அந்த ஜாமீன் மனுவில் பாஜக. மாநில தலைவர் அண்ணாமலையின் நடைப்பயணத்தில் பங்கேற்கவிடாமல் தடுக்கவே தன்னை கைது செய்துள்ளதாகவும், புழல் சிறையில் கைதிகளுக்கான அடிப்படை வசதிகளில் பல்வேறு குறைபாடுகள் உள்ளதாகவும் அமர் பிரசாத் ரெட்டி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த முறை இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, அமர் பிரசாத் ரெட்டியின் ஜாமீன் மனு தொடர்பாக காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 10- ஆம் தேதிக்கு அதாவது இன்று உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.
இன்றைய தினம் இந்த மனு நீதிபதி கார்த்திகேயன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில், இந்த விவகாரத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சம்பந்தப்பட்டுள்ளதால் அவர்களிடம் விசாரணை நடத்த வேண்டி இருப்பதாகவும், அமர் பிரசாத் ரெட்டிக்கு ஜாமீன் வழங்கினால் அவர் சாட்சிகளைக் கலைக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
பிறகு நீதிபதி, கைது செய்யப்பட்ட அமர் பிரசாத் ரெட்டி உள்ள 6 பேரும் கானத்தூர் காவல் நிலையத்தில் காலை, மாலை என இரண்டு வேளையும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
சேதப்படுத்தப்பட்ட ஜே.சி.பி. இயந்திரத்தின் உரிமையாளருக்கு 6 பேரும் தலா ரூ.2,000 என மொத்தம் ரூ.12,000 இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
[youtube-feed feed=1]