சென்னை: மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வான, நீட் தேர்வை எதிர்க்க அரசியல் கட்சிகளுக்கு உரிமை உள்ளது என சென்னை உயர்நீதி மன்றம் கருத்து தெரிவித்துள்ளது. ஆனால் பள்ளிகளில் கட்டாய கையெழுத்து பெறலாமா என்பது குறித்து முறையான பதிலை தெரிவிக்க வில்லை.
தமிழ்நாட்டில் நீர் தேர்வை வைத்து திமுக உள்பட பல அரசியல் கட்சிகள் அரசு அரசியல் செய்து வருகின்றன. ஏற்கனவே திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து நீட் விலக்கு என்று கூறிய நிலையில், அது நிறைவேறவில்லை. தற்போது, நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து இயக்கத்தை தொடங்கி உள்ளது.
இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவர் வழக்கறிஞர் எம்.எல்.ரவி, பொது நல மனுவை தாக்கல் செய்திருக்கிறார். மனுவில், நீட் தேர்வுக்கு எதிராக திமுக நடத்தும் கையெழுத்து இயக்கம் போன்ற அரசியல் நடவடிக்கைகளை பள்ளிகளில் அனுமதிக்க கூடாது என பள்ளிக்கல்வித் துறைக்கு உத்தரவிடக் கோரப்பட்டது. நீட் தேர்வுக்கு எதிராக 50 லட்சம் கையெழுத்துக்களை பெறும் இயக்கத்தை தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கியுள்ளார். இந்த இயக்கத்தில் இணைந்து கையெழுத்திடும்படி, பள்ளி மாணவர்கள் நிர்பந்திக்கப்படுவதாகவும், நீட் தேர்வு தொடர்பாக மத்திய அரசு இயற்றிய சட்டத்தை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ள நிலையில், அந்த சட்டத்துக்கு எதிராக மாநில அமைச்சர், போராட்டம் அறிவிக்க முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.
கையெழுத்து இயக்கம் தொடர்பாக அரசு எந்த அறிவிப்பும் வெளியிடாத நிலையில், இதை அரசின் கொள்கையாக கருத முடியாது எனவும், இந்திய அரசியலமைப்பின் பால் உண்மையும், மாறா பற்றும் கொண்டிருப்பதாக பதவியேற்றுக் கொண்ட அமைச்சர், சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்த முடியாது எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளில் இந்த கையெழுத்து இயக்கம் நடத்தப்படுவதாகவும், மாணவர்கள் நிர்பந்தத்துக்கு உள்ளாக்கப்படுவதாகவும், எந்த அனுமதியும் பெறாமல் நடத்தப்படும் இந்த கையெழுத்து இயக்கத்தை அமைச்சரே துவங்கியுள்ளதால், ஆசிரியர்களும், அதிகாரிகளும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
திமுகவினரின் இந்த நவடிக்கையை பள்ளி வளாகத்தில் அனுமதிக்க கூடாது எனவும், நீட் தேர்வுக்கு தயாராக வேண்டாம் என்ற எண்ணம் மாணவர்கள் மனதில் ஏற்படும் எனவும், படிப்பில் இருந்து மாணவர்களின் கவனம் திசை திரும்பும் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் பள்ளிகளில் கையெழுத்து இயக்கம் நடத்த அனுமதிக்க கூடாது என பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கையெழுத்து இயக்கத்தால் மனுதாரர் எப்படி பாதிக்கப்படுகிறார்? நீட் தேர்வு விஷயத்தில் மத்திய அரசு ஏதேனும் முடிவெடுத்து, அது மாணவர்கள் நலனுக்கு விரோதமாக அமைந்தால் வழக்கு தொடரலாம் எனத் தெரிவித்த நீதிபதிகள், அரசியல் கட்சி எதிர்ப்பு தெரிவிக்க உரிமை உள்ளது எனவும், இதுபோல பொதுநல வழக்குகளை தாக்கல் செய்ய ஒரு வரம்பு உள்ளது எனவும் தெரிவித்தனர்.
உண்மைத்தன்மையை நிரூபிக்க ஒரு லட்சம் ரூபாயை டிபாசிட் செய்தால் வழக்கை விசாரிப்பதாக நீதிபதிகள் கூறிய போது, வழக்கை வாபஸ் பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்டு வழக்கை வாபஸ் பெற அனுமதித்து, முடித்து வைத்து உத்தரவிட்ட நீதிபதிகள், சமுதாயத்துக்கு நலன் தருவதாக இருந்தால் பொது நல வழக்குகளை ஏற்கலாம் எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
இந்த விவகாரத்தில், அரசியல் கட்சியினர் பள்ளிக்கு சென்று, மாணவ மாணவிகளை சந்தித்து கட்டாய கையெழுத்து பெறுவது குறித்து நீதிபதிகள் எந்தவொரு கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோல மற்ற அரசியல் கட்சிகளும் பள்ளிகளுக்கு சென்று மாணவ மாணவிகளிடையே தங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு கையெழுத்து பெற முயன்றால், மாணாக்கர்களின் எதிர்காலம் என்னவாகும் என்பது கேள்விக்குறியே…