டெல்லி: டெல்லியில் ஆட்சி செய்து வரும் ஆம்ஆத்மி கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் இல்லம் மற்றும் அவருக்கு தொடர்புடைய 9 இடங்களில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. ஹவாலா மோசடி தொடர்பாக சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
மதுபான பாலிசி முறைகேடு தொடர்பாக ஆம்ஆத்மி கட்சியை சேர்ந்த டெல்லி துணைமுதல்வர் மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில், மேலும் பல அமைச்சர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்த நிலையில், இன்று ஆம்ஆத்மி கட்சியைச் சேர்ந்த டெல்லி சமூகநலத்துறை அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஹவாலா பணப்பரிவர்த்தனை தொடர்பாக அமைச்சர் ராஜ்குமார் இல்லத்தில் சோதனை நடப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
இதுகுறித்து கூறிய டெல்லி அமைச்சரும் ஆம் ஆத்மி எம்எல்ஏவுமான சவுரப் பரத்வாஜ், “ராஜ் குமார் ஆனந்தின் தவறு அவர் ஆம் ஆத்மி எம்எல்ஏவாகவும், கட்சியைச் சேர்ந்த அமைச்சராகவும் இருப்பதுதான். ஆங்கிலேயர் காலத்தில் கூட நீங்கள் ஒருவரின் வீட்டைச் சோதனையிட வேண்டும், நீதிமன்றத்தின் தேடுதல் வாரண்ட் தேவை, ஒருவரின் வீட்டிற்குள் நுழைய காவல்துறை அல்லது எந்த ஏஜென்சிக்கும் நீங்கள் உரிமை கொடுத்தால் பயங்கரமான சூழல் ஏற்படும் என்று ஆங்கிலேயர்கள் கூட நம்பினர். நீதிமன்றங்கள் தேடுதல் வாரண்ட் கொடுத்தன ஆனால் இன்று EDக்கு நீதிமன்ற வாரண்ட் தேவையில்லை, யாருடைய வீட்டில் சோதனை நடத்த வேண்டும் என்பதை ED அதிகாரிகள் முடிவு செய்கிறார்கள். எதிர்க்கட்சித் தலைவர்களின் வீடுகளில் மட்டுமே சோதனை நடத்தப்படுகிறது என்றார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தலைவர் ஷெஹ்சாத் பூனவல்லா, “இன்று தர்ணா மற்றும் நாடகத்திற்கான நேரம் அல்ல என்பதை ஆம் ஆத்மி உணர வேண்டும். இன்று உங்கள் பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கான நேரம், அதாவது நீங்கள் சென்று ஏஜென்சி களுக்கு பதில் சொல்லுங்கள்.
இந்த ரெய்டை பழிவாங்கல் என்று கூறாதீர்கள், இதுபோல விளையாடுவதை நிறுத்துங்கள்.நீதிமன்றங்கள் உங்களுக்கு எதிராக பழிவாங்குகிறதா? உச்சநீதிமன்றம் மதுபான ஊழல் நடந்துள்ளது என்று சொல்லும்போது பழிவாங்குகிறதா, ரூ.338 கோடி பணம் தடம் புரண்டது… பல மாதங்களாக மனிஷ் சிசோடியா, சஞ்சய் சிங்குக்கு ஜாமீன் மறுக்கும் நீதிமன்றங்கள் உங்களுக்கு எதிராகவா? செயல்படுகிறத என கேள்வி எழுப்பி உள்ளார்.