பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியான காசா பகுதியை நிர்வகித்து வரும் ஹமாஸ் படைப்பிரிவு உலகின் அதிநவீன ராணுவ தொழில்நுட்பத்தைக் கொண்ட இஸ்ரேல் மீது அக்டோபர் 7 ம் தேதி ஏவுகணைகளை வீசியதை அடுத்து உள்நாட்டு கலவரம் வெடித்தது.
இதனை சற்றும் எதிர்பாராத இஸ்ரேல், காசா மீது போர் பிரகடனம் செய்து இதுவரை 6,500க்கும் அதிகமான பாலஸ்தீனியர்களை கொன்று குவித்துள்ளது. தவிர 1500 இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டனர்.
8000த்துக்கு அதிகமானோர் இதுவரை மரணமடைந்துள்ள நிலையில் காசா மீதான தரைவழி தாக்குதலை தொடங்கியதாக இஸ்ரேல் ராணுவம் இன்று அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அது வெளியிட்டுள்ள கருப்பு வெள்ளை வீடியோ-வில் இடம்பெற்றுள்ள காட்சிகளின் தொகுப்பில் இஸ்ரேல் ராணுவ டாங்கிகள் காசா எல்லைச் சுவரை இடித்துத் தள்ளி காசா பகுதிக்குள் நுழைவதையும் அங்கு குண்டு வீசி தாக்குதல் நடத்துவதையும் படம்பிடித்துள்ளது.
இன்று நடைபெற்ற இந்த தரைவழி தாக்குதல் சிறிது நேரம் மட்டுமே நடைபெற்றதாகவும் விரைவில் பெரிய தாக்குதல் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ள இஸ்ரேல் ராணுவம் இந்த தாக்குதல் எந்த பகுதியில் எப்போது நிகழ்ந்தது என்பது குறித்து எந்த ஒரு தகவலும் வெளியிடவில்லை.
இஸ்ரேல் ராணுவத்தின் இந்த தரைவழி தாக்குதலை அடுத்து காசாவில் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் அங்கு வசிக்கும் 20 லட்சத்திற்கும் அதிகமான பாலஸ்தீனியர்களின் வாழ்வு நிச்சயமற்ற நிலையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.