சென்னை: தமிழ்நாட்டு மக்களிடையே திராவிட கட்சிகள் மொழிப்பற்றை அழித்து, ஜாதிப்பற்றை வளர்த்து வருகிறது என, திமுக, அதிமுக கட்சிகளை நாம் தமிழர் கட்சி தலைவர் கடுமையாக விமர்சனம் செய்தார்.
தமிழ்நாடு அரசு சமத்துவத்தை போற்றுவதாக கூறி வந்தாலும், ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றபதை மறந்து, சாதி, மத ரீதியிலான சலுகைகளை வழங்கி மக்களிடையே பிரிவினையை வளர்த்து வருகிறது. தற்போது சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என கூறி வருகிறது. இதனால், ஒழிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்படும் ஜாதிய வேற்றுமை மீண்டும் உருவெடுத்து வருகிறது. இதனால், தமிழ்நாடு கற்காலத்தை நோக்கி செல்கிறதோ என்ற எண்ணமும் மக்களிடையே உருவாகி வருகிறது.
இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள வேட்டவலத்தில் நடைபெற்ற ‘தமிழ் மீட்சியே தமிழர் எழுச்சி’ பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழரின் சிறப்புகளையும் தமிழ் மொழியின் சிறப்புகளை குறித்து உரையாற்றியதுடன், சில இலக்கிய கவிதைகளையும் பாடினார்.
தொடர்ந்து பேசியவர், “ஒரு நாட்டை அழிக்க வேண்டும் என்றால் படை எடுக்க வேண்டியதில்லை. துப்பாக்கி, பீரங்கி, தோட்டாக்கள் தேவையில்லை; ஒரு உயிர் சாக வேண்டியது இல்லை ஒரு துளி ரத்தம் பூமியில் சிந்த வேண்டியது இல்லை அழித்துவிடலாம். அவனுடைய மொழியை அழித்துவிட்டால் அவனுடைய கலை இலக்கியம் பண்பாடு அழிந்துவிடும்; பண்பாடு அழிந்துவிட்டால் இனம் அழிந்து விடும்; இனம் அழிந்து விட்டால் நாடு அழிந்து விடும்; இதுதான் வரலாறு, இதுபோன்ற நடவடிக்களைல்தான், 90% மேலே மொழி அழிந்துவிட்டது;
இறைவனால் பேசப்பட்டது தமிழ்மொழி, சிவபெருமானே தந்த மொழி தமிழ், உலகில் மானுட வாழ்க்கைக்கு சிறந்த நூல் திருக்குறள், அதில், எந்தவொரு பிழையும் கிடையாது என்றவர், இன்றைய திராவிடர்களிடம் வள்ளுவனுக்கு தமிழ் கற்றுக்கொடுத்தவன் யார் என்று கேளுங்கள் என்றவர், இன்று திராவிடர்கள் தமிழ்மொழியை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழ்நாட்டு மக்களிடையே திராவிடர் கட்சிகளால், திட்டமிட்டு, மொழிப்பற்று இனப்பற்று ஊட்டப்படாமல் ஜாதிப்பற்று மதப்பற்று ஊட்டப்படுகிறது என திமுக, அதிமுக கட்சிகளை கடுமையாக சாடினார்.
சீமானின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.