டில்லி
பீகார் அரசுக்குச் சாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களை வெளியிடத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.
கடந்த 2 ஆம் தேதி பீகார் மாநிலத்தில் எடுக்கப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு முடிவுகளை முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான மாநில அரசு வெளியிட்டது. \ பீகார் அரசின் சாதிவாரி கணக்கெடுப்புக்கு அனுமதி அளித்து பாட்னா உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், உச்சநீதிமன்ற உத்தரவின்படி சாதிவாரி கணக்கெடுப்பின் தகவல்கள் சேகரிக்கப்படவில்லை என்றும், கணக்கெடுப்புக்கான விவரங்களைச் சேகரிப்பதில் முறையான நோக்கம் எதுவும் இல்லை என்றும் தெரிவித்தார்.
மேலும் பீகார் அரசு சில தகவல்களை வெளியிட்டதன் மூலம் உச்சநீதிமன்றத்தின் தடை உத்தரவு மீறப்பட்டுள்ளதால், கூடுதல் தகவல்களை வெளியிடுவதற்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரரின் ஆட்சேபனையை நிராகரித்தனர். நீதிபதிகள் எந்த ஒரு தனிநபரின் பெயர் மற்றும் மற்ற விபரங்கள் வெளியிடப்படவில்லை என்பதால் தனியுரிமை மீறப்பட்டுள்ளது என்ற வாதம் தவறானது என்று குறிப்பிட்டு மாநில அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என்று தெரிவித்தனர்.
அதைத் தொடர்ந்து இந்த விசரணையை நீதிபதிகள் 2024-ம் ஆண்டு ஜனவரிக்குப் பட்டியலிடுவதாகத் தெரிவித்தனர். மேலும் இந்த மனு மீது 4 வாரங்களுக்குள் பதில் அளிக்கும்படி பீகார் அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.