சென்னை:  திமுக எம்.பி. டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கின் விசாரணைக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜரான தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு என்னிடம் தகுந்த ஆதாரங்கள் உள்ள என தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு திமுக ஃபைல்ஸ்1, திமுக பைல்ஸ்2 என்ற பெயரில் திமுக  கட்சியின் மூத்த தலைவர்களின் சொத்துப் பட்டியல், அவர்களது ஊழல் பட்டியல்களை அண்ணாமலை வெளியிட்டிருந்தார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு திமுக தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அவதூறு பரப்புவதாக கூறி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது திமுக எம்.பி. டி.ஆர்.பாலு உள்பட திமுகவினர் வழக்கு தொடுத்தனர்.  அந்த வழக்குகளை எதிர்கொள்ள தயார் என்று அண்ணாமலை கூறியிருந்தார்.

இதையடுத்து, திமுக எம்.பி. டி.ஆர்.பாலு அண்ணாமலை மீது,  தன்மீது அவதூறான கருத்துக்களை  தெரிவித்ததாக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில்  வழக்கு தொடுத்திருந்தார். அவரது மனுவில்,  திமுக சொத்து பட்டியல் விவகாரத்தில் அடிப்படை ஆதாரமின்றி தன்னைப்பற்றி அவதூறு கருத்துக்களை கூறியதாகவும், அவரது கருத்துக்கள் பொய்யானவை, எனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளது எனவும் கூறியிருந்தார்.

இந்த வழக்கு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.  இந்த வழக்கு கடந்த ஜூலை 14-ஆம் தேதி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்ற உத்தரவின் பேரில்,  பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேரில் ஆஜரானார். இதைடுத்து, அக்டோபர் 5ந்தேதி விசாரணைக்கும் ஆஜராக வேண்டும் என நீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதையடத்து, நேற்று மாலை,  டி.ஆர்.பாலு  அவதூறு வழக்கில் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீண்டும் ஆஜரானார்.  பாஜக தொண்டர்கள் புடைசூழ அண்ணாமலை நீதிமன்றத்தில் ஆஜரானார். டி.ஆர்.பாலு தரப்பில் வழக்கறிஞர் ரிச்சர்ட் வில்சன் ஆஜரானார்.

இதனையடுத்து, வழக்கு விசாரணையை வரும் டிசம்பர் 21ஆம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, “அன்றைய தினம் அண்ணாமலை நேரில் ஆஜராகியோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ விளக்கம் அளிக்கலாம்” என்று தெரிவித்தார்.

பின்னர் நீதிமன்ற வளாகத்தில்  செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “டி.ஆர்.பாலுவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு என்னிடம் தகுந்த ஆதாரங்கள் உள்ளன. ஆகவே, வழக்கை எதிர்கொள்ளத் தயார், அதற்கான ஆதாரங்களை தருகிறோம் என்று நீதிபதியிடம் சொன்னேன். வழக்கு தொடர்ந்து நடைபெறும்” என்று தெரிவித்துள்ளார்.

திமுக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளின் சொத்து மதிப்புகளுடன் வெளியானது ‘டிஎம்கே பைல்ஸ்2’ ஊழல் பட்டியல் – வீடியோ