டில்லி
நாளையுடன் ரூ. 2000 நோட்டுக்களை மாற்ற அளிக்கப்பட்ட காலக்கெடு முடிவடைய உள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர் புதிதாக ரூ.2000 மற்றும் ரூ.500 நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. கடந்த மே மாதம் ரூ.2999 நோட்டுகள் செல்லாது என்றும், புழக்கத்தில் உள்ள நோட்டுகளை செப்டம்பர் 30-ந்தேதிக்குள் வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்தது.
பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் தங்களிடம் இருந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொண்டனர். வங்கிகளில் இதற்கென சிறப்பு கவுண்டர்கள் திறக்கப்பட்டன. ரிசர்வ் வங்கி வழங்கிய காலக்கெடு நாளையுடன் நிறைவடைகிறது.
அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் பொதுமக்கள் ரூ.2 ஆயிரம் நோட்டுகளை வழங்கினால் அவற்றை வாங்க வேண்டாம் என்று நடத்துநர்களுக்கு உத்தரவிட்டுள்ளனர். மீறி வாங்கினால் அதற்கு நடத்துநர்களே முழு பொறுப்பாவார்கள் என்று கூறப்பட்டு உள்ளது.
பெட்ரோல் பங்குகள், டாஸ்மாக் கடைகள், சினிமா திரையரங்குகள், துணிக்கடைகள், ஷாப்பிங் மால்களிலும் ரூ.2 ஆயிரம் நோட்டுகள் வாங்கப்படுவதில்லை. காலக்கெடு நாளையுடன் முடிவடைவதால், இன்னும் காலநீட்டிப்பு செய்யப்படுமா? என்ற கேள்வியும் எழுந்து உள்ளது.
ரூ. 2000 நோட்டுக்கள் கோவில் உண்டியல்களில் இருக்கலாம் என்பதால் அனைத்து கோவில்களிலும் முன்கூட்டியே உண்டியல்கள் திறக்கப்பட்டு பணம் எண்ணும் பணி நடந்து வருகிறது. ரூ.2000 கிடந்தால் அவற்றை உடனடியாக வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் என்று அறநிலையத்துறை உயர் அதிகாரிகள் அனைத்து கோவில் செயல் அலுவலர்களுக்கும் உத்தரவிட்டு உள்ளனர்.
இது குறித்து வங்கி அதிகாரிகள், ‘நாளை வரை பணத்தை வாங்கும் நடவடிக்கையில் இறங்கி உள்ளோம். மத்திய அரசு கூறியப்படி இந்தப்பணியைச் சிறப்பாகச் செய்து முடிப்போம்’ என்று தெரிவித்துள்ளனர்.