சென்னை: சென்னை ஐஐடி-க்கு இந்திய பசுமை கட்டிட குழுமத்தின் பிளாட்டினம் சான்றிதழ் அங்கீகாரம் வழங்கப்பட்டு உள்ளது.
சென்னையில் செயல்பட்டு வரும் உலக தரம் வாய்ந்த, இந்திய தொழில்நுட்பக் கழகத்துக்கு (ஐஐடி மெட்ராஸ்) நாட்டின் மிகப் பெரிய மற்றும் உயர்ந்த தர மதிப்பீடு உடைய பசுமை வளாகங்களில் ஒன்று என பிளாட்டினம் சான்றிதழ் வழங்கி இந்திய பசுமைக் கட்டிட குழுமம் அங்கீகாரம் அளித்துள்ளது.
இந்தியாவின் டாப் 100 உயர் கல்வி நிறுவனங்களில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்து சாதனை செய்துள்ளது. பல்கலைக்கழகம், கல்லூரிகளில் கற்பித்தல், கற்றல் முறை, ஆராய்ச்சி, தொழில்முறை, மாணவர்களின் திறன், தேர்ச்சி விகிதம் உள்பட பல்வேறு அம்சங்களில் சென்னை ஐஐடி உலக நாடுகளில் உயர் கல்வி நிறுவனங்களுக்கு போட்டியாக திகழ்ந்து வருகிறது. இந்த நிலையில், சென்னை ஐஐடி-க்கு இந்திய பசுமை கட்டிட குழுமத்தின் பிளாட்டினம் சான்றிதழ் அங்கீகாரம் வழங்கப்பட்டு உள்ளது.
பிளாட்டினம் மதிப்பீடு என்பது இக்கல்வி நிறுவனம் மிகச் சிறந்த இயற்கை வளத் திறனையும், சுற்றுச்சூழல் பொறுப்புணர்வையும் நிரூபித்திருப்பதை எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது. அத்துடன், செயல்பாட்டுச் செலவுகளைக் குறைப்பது மட்டுமின்றி, மதிப்புமிக்க வளங்களையும் பாதுகாக்கிறது. இதன் மூலம் சென்னை ஐஐடி 90-க்கு 82 புள்ளிகள் என்ற சிறந்த மதிப்பீட்டைப் பெற்றுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்திய பசுமைக் கட்டிட குழுமம் என்பது நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்கள், பெருநிறுவன வளாகங்களில் நீடித்த, சுற்றுச்சூழலுக்கு உகந்த நடைமுறைகளை மேம்படுத்த இந்தியத் தொழில் கூட்டமைப்பு உருவாக்கிய மதிப்பீட்டு முறை மற்றும் சான்றிதழ் வழங்கும் திட்டமாகும். அதனப்டி, நாளொன்றுக்கு இரண்டு டன் கலப்புக் கழிவுகளை செயலாக்கும் திறன் கொண்ட திடக்கழிவு எரியூட்டு வசதியை சென்னை ஐஐடி சென்னை தனது வளாகத்தில் நிறுவியுள்ளது. இதரக் கழிவுகள் குப்பைக் கிடங்கிற்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, 2023, செப்டம்பர் 19 அன்று இந்த வசதியைத் தொடங்கி வைத்தார்.
பிளாட்டினம் மதிப்பீட்டின் முக்கியத்துவம் குறித்து விளக்கிய சென்னை ஐஐடி டீன் (திட்டமிடல்) பேராசிரியை லிஜி பிலிப் கூறுகையில், “611 ஏக்கர் பரப்பளவுடன் நாட்டின் மிகப் பெரிய வளாகங்களில் ஒன்றாக விளங்கும் சென்னை ஐஐடி இந்த சாதனையை எட்டியிருப்பது பாராட்டத்தக்கது என்று கூறினார். பசுமையான நடைமுறைகளைப் பின்பற்றுவதில் பிற கல்வி நிறுவனங்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கான அளவுகோலாக இந்த அங்கீகாரம் விளங்குகிறது” எனத் தெரிவித்தார்.
இக்கல்வி நிறுவனத்தில் உள்ள பரந்த வனப்பகுதி வெப்பத்தை எதிர்கொள்வதில் முக்கியப் பங்கு வகிப்பதால், நகரின் இதர பகுதிகளைக் காட்டிலும் 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குளிர்ச்சியாக உள்ளது என்று குறிப்பிட்டார்.
திடக்கழிவு எரிப்பு நிலையம்
திடக்கழிவுகளை எரியூட்டும் இயந்திரம் குறித்துப் பேசிய பேராசிரியை லிஜி பிலிப், “தற்போது இக்கல்வி நிறுவனத்தில் நாளொன்றுக்கு ஏறத்தாழ 4 டன் திடக்கழிவு உருவாகிறது.
சேகரிக்கும் இடத்திலேயே கழிவுகள் பிரிக்கப்பட்டு விடுகின்றன. இவ்வாறு பிரிக்கப்படும் கரிமக் கழிவுகள் உரமாகவோ, காற்றில்லா செரிமானமாகவோ மாற்றப்படுகின்றன. இங்கு ஒரு டன் திறன் கொண்ட ‘பயோடைஜஸ்டர்’ ஏற்கனவே செயல்பட்டு வரும் நிலையில், 2 டன் திறன் கொண்ட மற்றொரு ‘பயோடைஜஸ்டர்’ அமைக்கப்பட்டு வருகிறது.
இங்கு உற்பத்தியாகும் பயோகேஸ் இக்கல்வி நிறுவன விடுதியில் சமையலுக்குப் பயன்படுத்தப்படுகிறது. கனிமக் கழிவுகள் மேலும் பிரிக்கப்பட்டு மறுசுழற்சிக்காக விற்பனை செய்யப்படுகிறது. ஆனாலும், நாளொன்றுக்கு 300 முதல் 400 கிலோ அளவுக்கு கிடைக்கும் கலப்புக் கழிவுகள் குப்பைக் கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
இந்த வசதிகளுடன், எங்களது வளாகம் ‘பூஜ்ஜியக் கழிவு வெளியேற்ற வளாக’மாக (ஜீரோ வேஸ்ட் டிஸ்சார்ஜ் கேம்பஸ்) இருக்கும். எரியூட்டி இயந்திரத்தில் இருந்து மீட்கும் ஆற்றலுக்கான மீட்பு அமைப்பை நிறுவும் பணியில் ஈடுபட்டுள்ளோம் எனக் குறிப்பிட்டார்.
இந்த வசதியின் தாக்கம் குறித்து விளக்கிய சென்னை ஐஐடி-யின் வேதியியல் பொறியியல் துறையின் திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஆர்.வினு கூறும்போது, “40 சதவீத ஈரப்பதம் வரை பிரிக்கப்படாத கழிவுகளையும் இந்த வசதி கையாளும் திறன் கொண்டது. உணவு பேக்கேஜிங் கழிவுகள், பாதி உட்கொண்ட உணவுக் கழிவுகள், கோப்பைகள், அட்டைகள், பெரிய பேக்கேஜிங் பலகைகள், பயன்படுத்தப்பட்ட படுக்கைகள், நுரைபடுக்கை ஆகியவற்றை எரிக்கப் பயன்படும்.
கலப்புக் கழிவுகளை எரிப்பதன் மூலம், இக்கல்வி நிறுவனம் 2 டன் அளவுக்கு Co2-eq GHG உமிழ்வைக் குறைக்கிறது. கழிவுகளை அகற்றுவதற்கான செலவுகளைக் குறைத்து அதன்மூலமும் இக்கல்வி நிறுவனம் பயன்பெறுகிறது. எதிர்காலத்தில் எரிசக்தி பிரித்தெடுத்தல் வாயிலாகவோ, எரிவாயு இயந்திரத்தைப் பயன்படுத்தியோ, கொதிகலன்- டர்பைன் அமைப்பைப் பயன்படுத்தியோ, மின்சாரம் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது”.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.