திருவண்ணாமலை: சாத்தனூர் அணை முழு கொள்ளவை எட்டியுள்ளதால், தென்பெண்ணை ஆற்றின் கரையோர பகுதி கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சென்னகேசவ மலைகளுக்கு இடையில் தென்பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை சாத்தனூர் அணையாகும். இது திருவண்ணாமலை நகரில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. 1958ம் ஆண்டு காமராஜர் ஆட்சிகாலத்தில் கட்டப்பட்டது. இங்கு அழகிய பூங்காவும, ஆசியா கண்டத்தில் மிகப்பெரிய முதலைப்பண்ணை ஒன்றும் உள்ளது. இதன் கொள்ளளவு 7321 மில்லியன் கன அடிகள். முழு அளவு 119 அடி உயரம். திருவண்ணாமலை உட்பட பல பகுதிகளுக்கு குடிநீர் ஆதாரமாகவும், பாசன வசதியையும் அளிக்கிறது. தமிழகத்திலுள்ள குறிப்பிடத்தக்க அணைகளுள் இதுவும் ஒன்று.
தற்போது சாத்தனூர் அணை முழு கொள்ளளவான 114 அடியை எட்டி உள்ளது. இதனால், பாதுகாப்பு கருதி, அணையில் இருந்து பத்தாயிரம் கன அடி நீர் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் திருவண்ணாமலை விழுப்புரம் மாவட்டங்களில், தென்பெண்ணை ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாற, கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை சாத்தனூர் அணையில் திறந்து விடப்படும் தண்ணீர் தென்பெண்ணையாற்றில் திருவண்ணாமலை, விழுப்புரம் ,கடலூர் மாவட்டம் வழியாக பாய்ந்து சென்று கடலூர் அருகே வங்கக் கடலில் கலக்கிறது.