டெல்லி: காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக எம்.பி.க்கள் குழு நேற்று மாலை (18ந்தேதி) டெல்லியில் மத்திய அமைச்சரை சந்திக்க முடியாத நிலையில், இன்று காலை 9மணி அளவில் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழக எம்.பி.க்கள் குழு மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து, காவிரி நீர் தொடர்பான மனுவை அளித்தனர்.
காவிரியில், தமிழ்நாட்டுக்கு மாதந்தோறும் திறந்து விட வேண்டிய தண்ணீரை கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு திறந்து விடாமல், தமிழ்நாட்டை வஞ்சித்து வருகிறது. உச்சநீதிமன்ற உத்தரவின்படி அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும், தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு மறுத்து வருகிறது. இதனால், தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்களில் பயிரிப்பட்டுள்ள குறுவை சாகுபடி தண்ணீரின்றி காய்ந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழ்நாடு அரசு மத்தியஅரசு, காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்று குழு மூலம் காவிரியில் தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தியது. அதன்படி, காவிரி மேலாண்மை ஆணையம் தண்ணீரை திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால், திமுக கூட்டணி கட்சியான கர்நாடக காங்கிரஸ் கட்சி மறுத்து வருகிறது. இதையடுத்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு 21ந்தேதி விசாரணைக்கு வர உள்ளது.
இதற்கிடையில், தமிழ்நாடு அரசு சார்பில், தமிழக எம்.பி.க்கள் குழு அமைச்சர் துரைமுருகன் தலைமையில் மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து, கர்நாடகஅரசை காவிரியில் தண்ணீர் திறந்துவிட வலியுறுத்துவார்கள் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். அதன்படி, அமைச்சர் துரைமுருகன் மற்றும் எம்.பி.க்கள் டெல்லியில் மத்திய அமைச்சரை 18ந்தேதி மாலை சந்திக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், நேற்று (18ந்தேதி) மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றதால், தமிழக எம்.பி.க்கள் மத்திய அமைச்சரை சந்திக்க முடியவில்லை. இதனால் தமிழக எம்.பி.க்களின் சந்திப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன், காவிரி நீர் திறக்க கர்நாடகாவுக்கு மத்திய அரசு அழுத்தம் தர வேண்டும் என்று வலியுறுத்தி மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க இருந்தோம். ஆனால், எதிர்பாராதவிதமாக இன்று மாலை நடைபெறுவதாக இருந்த சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றார். .இதையடுத்து, இன்று காலை 9 மணியளவில் மத்திய நீர்வளத்துறை அமைச்சருடன் சந்திப்பு நடைபெறும். காவிரி நீர் திறக்க கர்நாடகாவுக்கு மத்திய அரசு அழுத்தம் தர வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையம் கூறுவதை கூட கர்நாடக ஏற்க மறுக்கிறது என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இன்று காலை மத்திய அமைச்சருடன் தமிழக எம்.பி.க்கள் குழு சந்தித்து பேசினார். தலைநகர் டெல்லியில் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் உடன் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழக எம்.பி.,க்கள் குழு சந்திப்பு காவிரியிலிருந்து தமிழகத்திற்கு நீர் திறந்து விட கர்நாடக அரசை அறிவுறுத்த வலியுறுத்தினர். மேலும் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீர் பங்கீட்டை முறையாக திறந்துவிட கர்நாடகா அரசை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என கோரிக்கை மனுவையும் வழங்கினர்.
இந்த சந்திப்பின்போது அமைச்சர் துரைமுருகனுடன், திமுக எம்.பி., டி.ஆர்.பாலு, காங்கிரஸ் எம்.பி., ஜோதிமணி, அதிமுக எம்.பி., தம்பிதுரை, மதிமுக எம்.பி., வைகோ, வி.சி.க எம்.பி., திருமாவளவன், பாமக எம்.பி., அன்புமணி உள்ளிட்ட 12 பேர் குழுவில் உள்ளனர்.