சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றி வந்த 5 நீதிபதிகள் நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டு உள்ளார்.
மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் மொத்த நீதிபதிகள் எண்ணிக்கை 75. உயர் நீதிமன்றத்தில் 74 நீதிபதிகள் மற்றும் ஒரு தலைமை நீதிபதி ஆகியோர் இருக்க வேண்டும். இவர்களில் அதில் 56 பேர் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்படலாம். மற்றவர்கள் கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றி வருவார்கள்.
இந்த நிலையில், தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றி வரும், ஏ.ஏ.நக்கீரன், என்.மாலா, எஸ்.சௌந்தர், சுந்தர் மோகன், கே.குமரேஷ் பாபு ஆகியோரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி சஞ்சய் கிஷான் கவுல், நீதிபதி சஞ்சீவ் கன்னா கொலிஜியம் சமீபத்தில் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.
இதை ஏற்று, மத்திய அரசு, குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பியது. இதற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் வழங்கி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். அதன்படி, சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 5 பேர் நிரந்தர நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
நீதிபதிகள் 5 பேரையும் சென்னை உயர்நீதிமன்ற நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.