சென்னை பனையூரில் உள்ள ஆதித்யராம் பேலஸில் நேற்று மாலை இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை கச்சேரி நடைபெற்றது.
இந்த இசை நிகழ்ச்சி ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகர்களிடையே மறக்கமுடியாத நினைவுகளை தந்துள்ளது.
ஆகஸ்ட் மாதம் நடைபெறுவதாக இருந்த இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி கடைசி நேரத்தில் மழை காரணமாக கைவிடப்பட்டது.
பின்னர் செப்டம்பர் 10 ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இதற்காக சென்னை மாநகர காவல்துறை மற்றும் போக்குவரத்து போலீசார் தேவையான முன்னேற்பாடுகளை செய்த நிலையில் கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து இடையூறு ஏற்படாமல் இருக்க வாகன ஓட்டிகளுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சி குறித்து முன்னெச்சரிக்கையும் ஏற்படுத்தினர்.
ஆயிரக்கணக்கான ரூபாய் கொடுத்து ஒரு மாதத்திற்கு முன்பே டிக்கெட் வாங்கியவர்கள் நேற்று மதியம் முதல் இசை நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்குப் படையெடுத்தார்கள்.
உள்ளே அனுமதிக்காக நீண்ட வரிசையில் காத்திருந்த நிலையில் நிகழ்ச்சி துவங்கிய சிறிது நேரத்தில் நுழைவாயில் மூடப்பட்டதை அடுத்து டிக்கெட் வைத்திருந்த ரசிகர்கள் நிகழ்ச்சியை பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
சரியான ஏற்பாடுகள் இல்லாததால் சிலர் போலீசார் மற்றும் அமைப்பாளர்களுடன் (ACTC Events) வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
“சென்னையில் உலகத்தரம் வாய்ந்த இசை நிகழ்ச்சி நடைபெற வேண்டும் என்றும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் உருவாக வேண்டும் என்றும் கலாச்சார மறுமலர்ச்சி வேண்டும் அதற்காக மக்கள் விழித்துக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் வேளையில் நானே அதற்கு பலிகடா ஆகிவிட்டேன்” என்று தனது இன்ஸ்டாகிராமில் ஏ.ஆர். ரஹ்மான் உருக்கமாக பதிவிட்டுள்ளார்
மேலும், “ஒரு இசையமைப்பாளராக, ஒரு அற்புதமான நிகழ்ச்சியை வழங்குவதே எனது வேலை, மற்ற அனைத்தும் கவனிக்கப்படும் என்று நான் நினைத்தேன்.
மழை பெய்யக் கூடாது என்று நினைத்துக்கொண்டு, வெளியே என்ன நடக்கிறது என்ற எண்ணம் இல்லாமல் உள்ளே மகிழ்ச்சியாக நடித்துக் கொண்டிருந்தேன்.
எங்கள் நோக்கங்கள் நன்றாக இருந்தன, ஆனால் பதில் எங்கள் எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டது என்று நான் நினைக்கிறேன். நாங்கள் இப்போது தரவைச் சேகரித்து வருகிறோம், விரைவில் ரசிகர்களை ஆச்சரியப்படுத்துவோம்.
அன்புள்ள சென்னை மக்களே, உங்களில் டிக்கெட் வாங்கி, துரதிர்ஷ்டவசமான சூழ்நிலையில் நுழைய முடியாமல் போனவர்கள், உங்கள் டிக்கெட் வாங்கியதன் நகலை arr4chennai@btos.in என்ற மின்னஞ்சலுக்கு உங்கள் குறைகளுடன் பகிர்ந்து கொள்ளவும். எங்கள் குழு விரைவில் பதிலளிப்பார்கள்
இப்போது, நாங்கள் மிகவும் குழப்பத்தில் இருக்கிறோம். குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் இருந்ததால் பாதுகாப்பு முதன்மையான பிரச்சினையாக இருந்தது. நான் யாரையும் சுட்டிக்காட்ட விரும்பவில்லை, ஆனால் நகரம் விரிவடைகிறது என்பதை நாம் உணர வேண்டும், மேலும் இசை மற்றும் கலை நுகர்வு ஆர்வமும் விரிவடைகிறது.
உலகளாவிய அனுபவங்களுக்கு, நாம் ஒரு சர்வதேச அமைப்பைக் கொண்டிருக்க வேண்டும். இது எனக்கு ஒரு பாடம். ஒரு இசைக்கலைஞர் என்பதைத் தாண்டி, உள்கட்டமைப்பிலும் ஈடுபட இது என்னைத் தள்ளுகிறது.
உலகில் உள்ள பல கலைக் கூட்டங்களுக்கு நான் சென்றிருக்கிறேன், அவற்றைப் பார்க்கும்போது, இந்த அனுபவத்தை சென்னையில் உள்ள எனது சொந்த மக்களுக்கு ஏன் மறுக்க வேண்டும்? என்று நினைப்பதுண்டு” என்று தி இந்து நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.
நேற்றைய ‘மறக்குமா நெஞ்சம்’ தன்னை மிகவும் கலங்கடித்திருப்பதாக கூறிய ரஹ்மான் “கடந்த ஆண்டு அமெரிக்காவில் 20 கச்சேரிகள் செய்தோம், எல்லாமே சுமூகமாகவும் பிரச்சனையில்லாமல் இருந்தது – ஏனென்றால் நாங்கள் அங்குள்ள அமைப்பை முழுமையாக நம்பினோம்” என்று அந்த பேட்டியில் கூறியுள்ளார்.