அருள்மிகு அபயவரதீஸ்வரர் திருக்கோயில்,  அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை தாலுக்கா,  தஞ்சாவூர் மாவட்டம்.
காலை 6.30 மணி முதல் மதியம் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
முன்னொரு காலத்தில், அசுரர்களால் துரத்தியடிக்கப்பட்ட தேவர்களும், முனிவர்களும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள திருவாதிரை நட்சத்திர மண்டலத்தில் தஞ்சம் புகுந்தனர்.  பிரதோஷ காலத்திலும், திருவாதிரை நட்சத்திரம் வரும் நாளிலும், சிவபெருமான் உலாவரும் லோகங்களில் திருவாதிரை நட்சத்திர மண்டலமும் ஒன்று. இந்த மண்டலத்தில் நுழையவே அசுரர்கள் பயப்படுவர். அதே நேரம் அங்கு சென்று சரணடைந்தவர்களை அவர் அபயம் தந்து காப்பாற்றுவார். இதனால் சிவனுக்கு அபயவரதீஸ்வரர் என்று பெயர். எனவே திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், திருவாதிரை நாளில் இங்கு வழிபாடு செய்வது சிறந்த பலன் தரும்.
பைரவ மகரிஷி, ரைவத மகரிஷி ஆகியோர் இத்தலத்தில் அருவமாக அபயவரதீஸ்வரரை வழிபாடு செய்வதாகக் கூறப்படுகிறது. ரைவதம் என்பது சிவனது முக்கண்ணிலும் ஒளிரும் ஒளியாகும். இந்த சக்தியின் வடிவமாக ரைவத மகரிஷி திருவாதிரை ஆருத்ரா தரிசன நாளில் அவதரித்தார். இந்த முனிகள் இருவரும் திருவாதிரை நாளில் இங்கு வழிபாடு செய்வதாகக் கூறப்படுகிறது. ஆதிரை லிங்கமாய் ஆமறை ஜோதியன் ஆதிரை தானதில் அபயமென்றருளுவன் ஆதிரை வதனழல் ஆகிடும் ஆதியில் ஆதிரு ஆதிரை ஆலமர் ஆரணா! என்ற திருவாதிரை கோயில் பற்றிய பாடலை, திருவாதிரை நட்சத்திரக்காரர்கள், அபயவரதீஸ்வரர் முன் நின்று பாடி வணங்கினால் சிவனின் திருவருளையும், ரைவத மகரிஷியின் அருளையும் பெறலாம்.
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களும், இராகு–கேது தோஷத்தினால்      பாதிக்கப்பட்டவர்களும் வாழ்நாளில் அடிக்கடி வழிபட வேண்டிய சிறந்த தலம் இது. திரிநேத்ர சக்தி கொண்ட தலம். தன்னை நம்பியவருக்கு அபயம் தரும் அபய வரதீஸ்வரராக இத்தல இறைவன் விளங்குகிறார். இத்தல அம்மன் தெற்கே கடலை பார்த்து அருள்பாலிப்பதால் கடல் பார்த்த நாயகி என்ற பெயரும் உண்டு. சம்பந்தர் பாடலில் இத்தலம் வைப்புத்தலமாக போற்றப்படுகிறது. ஒவ்வொரு திருவாதிரை நட்சத்திரத்தன்றும் சித்தர்கள் இங்கு அரூப வடிவில் வழிபாடு செய்வதாக கூறப்படுகிறது. திருக்கடையூருக்கு அடுத்தபடியாக எமபயம் போக்கும் தலமாக இத்தலம் விளங்குகிறது. சமயக்குரவர் மூவரில் சுந்தரரும், சம்பந்தரும் இத்தலத்தை தங்களது தேவார வைப்புத்தலமாக பாடியுள்ளனர்.
தீராத நோயால் அவதிப் படுபவர்கள், எமபயம் உள்ளவர்கள், ஆயுள் விருத்தி வேண்டுபவர்கள் இங்கு வழிபாடு செய்கிறார்கள். ஆயுஷ் ஹோமமும், மிருத்யுஞ்ஜய ஹோமமும் திருக்கடையூருக்கு அடுத்தபடியாக இங்கு அதிக அளவில் செய்யப்படுகிறது. இந்த நட்சத்திர பெண்களுக்கு எந்த தோஷத்தினால் திருமணத்தில் தடை இருந்தாலும் இங்கு வழிபாடு செய்தால் பலன் கிடைக்கும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்த மன்னர் அதிவீரராமபாண்டியன் இத்தல இறைவனை வழிபட்டு பல அரிய திருப்பணிகள் செய்துள்ளார். ஆரம்ப காலத்தில் இத்தலம் திருஆதிரைப்பட்டினமாக இருந்து, அதிவீரராமன் பட்டினமாகி, தற்போது அதிராம்பட்டினமாக மாறிவிட்டது.
 திருவிழா:
பங்குனி உத்திரம் இத்தலத்தின் முக்கிய திருவிழா. தவிர திருக்கார்த்திகை, ஐப்பசி அன்னாபிஷேகம், மகா சிவராத்திரி, ஆருத்திரா அபிஷேகம்.
கோரிக்கைகள்:
திருவாதிரை நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர். தீராத நோயால் அவதிப்படுபவர்கள், எம பயம் உள்ளவர்கள், ஆயுள் விருத்தி வேண்டுபவர்கள் இங்கு வழிபாடு செய்கிறார்கள். ஆயுஷ் ஹோமமும், மிருத்யுஞ்சய ஹோமமும் இங்கு அதிக அளவில் செய்யப்படுகிறது. எந்த தோஷத்தினாலும் திருமணத்தில் தடை இருந்தாலும் இங்கு வழிபாடு செய்தால் பலன் நிச்சயம்.
நேர்த்திக்கடன்:
சிவனுக்கும் அம்மனுக்கும் அபிஷேகம் செய்து வஸ்திரம் சாற்றி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.